அந்த ஒற்றைப் பனைமரம் ஏனோ இன்றுவரை என்
…………ஆழ்மனதில் நின்று கொண்டு அழுகிறது .
சொந்த நாட்டிலே சுதந்திரமாக வாழ்ந்ததாக ஜாலம்,
……….சுற்றம் சூழ சுத்தக் காற்றை சுவாசித்த காலம்.
எந்த விடயமாக வீட்டை விட்டு வெளிக்கிட்டாலும்,
…….எதிரிலந்த ஒற்றைப்பனைமரமே முழிவியாழம்.
வந்து போகும் அயலூரவர்களுக்கெல்லாம் சிரித்தபடி
……..வாசலில் நின்று விலாசம் கூறுவதும் அதுவே.
பந்து விளையாட நல்ல மைதானம் அந்த-மரத்தடியே
……பள்ளிக்கு மட்டமடித்து நாம் கூடுவதும் அவ்விடமே
குந்த நல்ல குத்தி போட்டு கிழடுகள் கூடி இருந்து
…..குசலமாடி வம்பளப்பதும் அந்த மரத்தின் கீழேயே
எந்தக்காலத்திலுமே அது நொங்கு-தராததால் பாவம்
…..எல்லோரும் அதை மலட்டு மரமென்றும் பழிப்பர்
சந்து பொந்தெல்லாம் சைக்கிலோடிக்களைத்து வந்து,
….சற்றுநேரம் அதில் காலையூன்றி நின்றாலே தனிசுகம்.
நொந்த மனதோடு நான் பிறநாட்டுக்கு புறப்படுகையில்
…நொங்குதருவேன் திரும்பிவா என்றெனக்கு சைகித்ததது.
வந்து வருடங்களாகிவிட்டது என் ஒற்றைப் பனை மரமே!!
…..வரவேற்க்கக் காத்திருப்பாயோ? .வெடியில் சிதறினாயோ?
பனைநேசன்