நான் பார்த்திருக்கிறன்
வெள்ளை உடையோட
கையில் பதாகையோட
அண்ணன் படத்தோட
எங்கள் உரிமைகளுக்காக
வீதியில் ஓடியவனையும்
பாதையில் குரலடைத்தும்
குளறி எமக்கானவற்றை
அதிகாரத்திடம் கேட்டவனையும்
கண்ணார பாத்திருக்கன்
அங்க தான் அதையும் கண்டன்
பச்சை உடைகள்
அதில் பல வரிகள்
நெஞ்சில் துள்ளி விளையாடிய
நஞ்சுக் குப்பிகள்
பலமேறி உழைத்த கரங்கள்
அணைத்த தீ உமிழ்ந்த
துப்பாக்கிகள்
வண்ண உடைகள் துறந்த
எங்கள் பிள்ளைகளை
அந்த பூமியில் தான் பார்த்தன்
நடுச்சாமம் பன்னிரண்டுக்கு
காடுகள் அருவிகளை
தனியொருத்தியாய்
கடந்து சென்ற இளையவளையும்
தங்கம் துறந்து தங்ககமாய்
பனைமரக்குற்றிக் கூடுகளில்
சுதந்திரத்துக்காய் விழி
முழித்திருந்தவளையும்
நான் சுகத்தோடு கண்டேன்
மாடுகள் தான் வாழ்வாதாரம்
எனினும் வெண் பால்
நிறத்து மனங்களையும்
பச்சை புல்வெளி தாண்டும்
புள்ளினங்களையும்
வாவி மடி தேடி
வள்ளமேறி வரும்
வலை தவிர்க்க
துள்ளி ஓடிய
மீனினங்களையும்
கண்ணார பாத்திருக்கிறேன்
வெள்ளிகள் வெளிச்சமிடும்
கிடுகு கூரைகளுள்
கஞ்சி உணவெனிலும்
பசியாற்றி உண்டவளின்
கரங்களில் ஏறிய
உழைப்பின் முறுக்கை
அங்கேதான் ரசித்திருந்தேன்
பாலகன் பாலுக்காய் ஏங்குவான்
தாய்நாட்டின் தேவையறிந்து
காவலரணில் தாய்
தூங்காது காத்திருப்பாள்
அழகொளிர்ந்த மழலைமுகம்
தாய் அணைப்பை தேடும்
மழலை முகம் தனை மறைத்து
எதிரி முகம் நிழல் காட்டும்
இதை எல்லாம் நான்
அங்கே தான் கண்டேன்.
கறுப்பு வரி உடைத்து
கலக்கமின்ற சிரித்த
கலங்கரை விளக்குகளையும்
களு கொட்டிக்கு பயந்த
பச்சையுடைக் காறனையும்
அங்குதான் ஆசையோடு
பார்தது மகிழ்ந்தேன்.
இன்றும் பர்க்கிறேன்
குற்றுயிராய் என் உடல்
இருத்துக் கொண்டிருக்கும்
இந்த அதிகாலையில்
இச்சை இன்றி பார்க்கிறேன்
நல்லாட்சியின் நன்மைகளை
நாதி இன்றி பார்க்கிறேன்
நூறுநாள் கடந்த
காணாமல் போனவர் போரும்
என் வீடு எனக்கு வேணும்
எனும் சத்திய போரும்
எங்கோ ஒரு மூலையில்
முக்கி முனகி கொண்டு
கிடப்பதை கண்ணாற பாக்கிறேன்
கொள்ளையிட்டவனும் அதற்கு
தொல்லை தந்ததும்
தண்டிப்பும்
பதவிக்குறியும்
கதிரை பிடிப்பும்
காலால் உதைப்பும்
தட்டி வீழ்த்தலும்
திடீர் எழுச்சியும்
என பல நூறை
கண்மகிழ பார்க்கிறேன்.
இங்குதான் அதையும் காண்கிறேன்
தமிழீழம் எனும் பரந்து விரிந்த
என் உயிரைத் துறந்து
மாகானம் எனும்
உப்பற்ற சோற்றுக்காய்
அணியணியாய் எழுந்த
இளம் சேனைகளை இங்கு தான்
கண்டேன்
இழுத்திழுத்து சாகும்
நேரத்திலும் என் உயிரின் ஆசை
என் தமிழீழம் எனக்கு வேணும்….
ஆக்கம் இரத்தினம் கவிமகன்…