நரகமாய் வாழ்க்கை
நகர்ந்து போகையில்
சிகரமாய் உச்சியில்
சிந்தையால் மெச்சியே
ஆறுதல் சொன்னவள்
ஆயுளில் நின்றவள்
தோல்வியில் நிற்கையில்
துவண்டு போகையில்
வாழ்வில்லை என்று நான்
வாடியே தவிக்கையில்
பால் நிலா போலவே
பக்குவம் காட்டினாள்
மூடியே மனதுக்குள்
மூழ்கிய சோகத்தை
தேடியே எடுத்து
தேனினில் குழைத்து
வாடிய பயிருக்கு
வான் மழை போலவே
வார்த்தையால் போற்றினாள்
வாழ்க்கையை மாற்றினாள்.
மற்றவர் பார்வைகள்
மாசுடன் நோக்கவே
பற்றதை சிறிதேனும்
பாசத்தை குறைக்காமல்
நற்றவை அற்றவை
நலமாக பெற்றவை
அனைத்தையும் தந்தாள் – தோழி
அகத்தினை வென்றாள்.
ஆக்கம் கவிஞர் ஏரூர் கே.நெளஷாத்.