„பனிவிழும் மலர் வனம்“?? அத்தியாயம்-52

மதுமதியின் தங்கையின் துடுக்குத்தனமான பேச்சைக்கேட்டு தாயார் மனம்விட்டு சிரித்துக்கொண்டார். உணவு அருந்திய கையோடு அக்காள் தன் குழந்தையோடு புறப்பட ,சொன்ன நேரத்திற்கு ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நின்றது. அவசரஅவசரமாக சாப்பாட்டை அத்தானுக்கு கொடுப்பதற்காக எடுக்க அடுக்களைப் பக்கம் ஓடியவள் பாத்திரங்களை கீழே உருண்டு விழுந்த சத்தத்தில் தாயார்““ எல்லாத்திலையும் நிதானம் வேணும் .. சாப்பாடு கட்டி மேசையிலை வைத்துக்கிடக்கு.. அதற்கேன் இந்த பாத்திரங்களை போட்டு உடைக்கிறாய்.. எடுத்திட்டு கெதியாக வா..““ தாயாரின் அதட்டலில் பதறியபடி அக்காளிடம் உணவுப்பொட்டலத்தை அவசரஅவசரமாக கொடுத்து அனுப்பியபடி“““ அம்மோய் அதம்மா அக்காளின்ரெலிபோன் வந்த அவசரம் மா.. “ என்றபடி கைத்தொலைபேசியை தாயிடம் நீட்டினாள். மதுமதிதான் பேசினாள்.. அவளின் கணீரென்ற குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.. தாயாருக்கோ மகளின் மேல் ஒரு வித பரிதாபமும் மகிழ்ச்சியும் கலந்த தொனியில் „“மதும்மா எதற்கும் யோசிக்காதே.., கல்யாணம் வரை வந்த சங்கர் இப்படி மனம் மாறிப்போவான் என நான் நினைக்கவில்லையே..எல்லாம் நன்மைக்கே…மறப்போம் மன்னிப்போம் என இருக்கணும்.. எப்படிம்மா அனசனுக்கு இப்ப?? நான் கேட்டதாக சொல்லம்மா.. நீ மட்டும் மதம் மாறிடாதை.. அவனை சைவக்காரனாக மாற்றிப்போடு… „“ தாயின் குரலில் ஏக்கத்தோடு வந்த அந்த எதிர்பார்ப்பு நெஞ்சை மெல்ல தாக்கிச்செல்ல““ அம்மா எனக்கு தெரியாதா என்ன.. கோயிலோடு வாழ்ந்த நான் மாறிடுவேன் என நினைக்கிறீங்களா அம்மா… யோசிக்காதைங்க .. அனசு இப்ப நல்லா இருக்கான்.““ என்றாள்.. தன் அக்காளுடன் பேச வேண்டும் என்ற ஆசையில் தாயிடம் தொலைபேசியை பறித்தெடுத்த செல்லத்தங்கையவள் கொல்லைப்புறத்திற்கு ஓடினாள்““ அடியே மது நீ பெரிய ரவுடிதானே.. உன் காதலுக்கு பச்சைக்கொடி பிடிக்க சங்கரை இப்படி எல்லார்முன்னிலையிலும் தலைகுனிய வைத்திட்டியே பாவி““ என சொல்லி கோபித்துக்கொண்டாள். அவள் தன் அக்காளுடன் எப்போதும் தோழி போலவே பழகுவாள்.. தன் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனை என்றாலும் அம்மாவுடன் கூட பகிர தயங்கும் தங்கை அக்காளுடன் மனம் விட்டு பேசுவதிலும் அவள் ஆலோசனையை கேட்டு நடப்பதிலும் தயங்குவதில்லை.. அந்தளவு அன்புப்பிணைப்பு அவர்களிடம் இருந்தது. „“ ஏய் வாலு.. சும்மா தொண தொண என பேசாதே.. நானா அவனை தலைகுனிய வைச்சேன். அவன் தன் மேல் தானே பழியை போட்டுக்கொண்டான் “ மதுமதியின் பேச்சிலே நிதானம் இருந்தது. தன் தங்கையிடம் மணிக்கணக்கில் தன் காதலன் அனசனைப்பற்றி ஆசையோடும்,பெருமையோடும் பேசிப்பேசி சிரித்தாள். அவனுக்கும் அவளுக்கும் இடையில் வந்த சிறு ஊடலே இந்த நிமிடம்வரை பூதாகார வடிவில் இடையில் குறுக்கிட்ட பல பிரச்சனைகளுக்கு காரணமாகி முகம் கொடுக்க வேண்டிய நிலையின் கதையை சொன்னபோது அவள் குரலில் தழுதழுப்புத்தெரிந்தது.. இல்லையேல் பேசும் அந்தக்கணங்கள் ஒவ்வொன்றிலும் அவள் மனதில் ஆயிரம் மொட்டுக்கள் விரிந்து மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள்..

அனசன் வீட்டிலோ மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடிக்கொண்டிருந்தது. இந்து முறைப்படியான கல்யாணம் என்பதில் அனசனின் தங்கை அனெற்றாவுக்குகொள்ளைப்பிரியம்.,அவளுக்கு தமிழ் சேலை உடுத்திக்கொள்வதில் அதிகளவு நாட்டம் இருந்தது. அவள் அதிகம் Bolly Wood படங்கள் விரும்பிப்பார்ப்பதால் அந்த நடிகைகள் போல உடுத்திக்கொள்ள வேண்டும் என்ற கனவும் இருந்தது.. அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி உள்ளூர மகிழ்ந்து கொண்டிருந்தாள் அனெற்றா.. . மதுமதி வீட்டாரின் சம்மதம் கேட்ட நேரத்தில் இருந்து அனசன் கனவு வானிலே மிதந்து கொண்டிருந்தான்.. காதலியாக கனவிலும் நினைவிலும் வாழ்ந்து கொண்டிருந்தவள் இன்னும் சில நாட்களில் திருமதி அனசனாக தன்னை மாற்றப்போகிறாள். தன்னோடு ஆயுள்வரை ஒன்றாக வாழப்போகிறாள் என்ற நினைப்பில் திளைத்துப்போயிருந்தான். அவனுக்கு தன் கால் ஒரு ஊனமானது கூட பெரிதாகத் தெரியவில்லை..அந்த சந்தோசத்தை அனுபவிக்க எழும்பி நின்று நடனம் ஆட வேண்டும்போல் இருந்தது..தன் இயலாமையை நினைத்த அந்தகணம் மனம் சோர்வுற்றான்.. உடனேயே மதுமதியை பார்க்கவேண்டும் என்ற ஆசை அவனை உறுத்தியது.. “ மது உனை இப்பவே பார்க்கணும்.. பிளீஸ் வருவாயா? „கெஞ்சினான்.. „“ அனஸ் என்ன விளையாடுறியா..கல்யாணவேலை இங்கு எக்கசக்கம்.. நகரக்கூட முடியலைடா.. இந்த நேரம் அந்த தமிழ் புத்தகத்தை வாசி.. அப்பத்தான் நம்ம சனத்தோடை பேசலாம் .. புரியுதா“ அதட்டலோடு சொன்னாள்.. அவளின் இந்த பதில் அனசனை சோர்வுற வைத்தது. மௌனமானான்.. „“ அனஸ் என்னடா பேசடா.. பிளீஸ்.. “ அவளின் கெஞ்சலுக்குப்பிறகு „“ சரி மது இப்பவே இந்த அதட்டல்.. கல்யாணத்தின் பின் எந்நிலை என்னவாகுமோ.. யேசுவே எனைக் காப்பாற்றும்…““ இதைக்கேட்டு இருவரும் மனம்விட்டு சிரித்தனர்.

மெல்ல எட்டி கூடத்தைப்பார்த்தாள். மாமி கல்யாணச்சமையலுக்குத் தேவையான சாமான்களை பட்டியலாக எழுதிக்கொண்டிருந்தார்.
மாமா ஞாயிறுவாரப்பத்திரிகையில் மூழ்கிப்போயிருந்தார். சங்கர் தொலைபேசியில் சிரித்து பேசுவது கேட்டது.. நிச்சயம் அது சந்தியாவாகத்தான் இருக்க வேண்டும் . அனுமானித்துக்கொண்டாள். அனசனை பார்க்கவேண்டும் போல மதுவிற்கும் இருந்தது.. எப்படி இங்கிருந்து போவது?? இத்தனை வேலைகளுக்கு இடையில் என்ற கேள்வியோடு நேரத்தைப்பார்த்தாள். நேரம் முற்பகல்10.00 மணியை காட்டியது. அவள் வீட்டை அழகாக ஒழுங்குபடுத்தி இருந்தாள். உடுப்புக்கள் தோய்க்கும் வேலை பாக்கி இருந்தது.. இன்று நல்ல வெயிலாகவும் இருந்தது.. பறவைகள் பாடும் ஓசை மனதிற்கு இதமாக இருந்தது.. கோடைக்காலத்தின் அழகே தனி.. எங்கும் மலர்களின் வர்ணஜாலங்கள்.. டென்மார்க் அழகுமயமாக காட்சியளித்தது.. கண்களை பறித்தது. ஜன்னலினூடு வீதியை நோக்கினாள்.. கைகோர்த்தபடி ஜோடி ஜோடியாக சிரித்து பேசிச்செல்லும் காதலர்கள்.. கூட்டம் கூட்டமாக இயற்கை அழகை ரசித்தபடி காலாற நடக்கும் பல மனிதர்கள். ஞாயிற்றுக்கிழமை உல்லாசமான ஓய்வுநாள்..

இன்று சந்தியாவை தன் தாய்க்கு அறிமுகப்படுத்துவதாக சங்கர் சொல்லியிருந்தது மதுவின் நினைவுக்கு வந்தது. மாமி கேட்கும் கேள்விகளுக்கு அவளை தயார்படுத்தும் பொறுப்பை சங்கர் மதுவிடம் விட்டிருந்தான்..
சங்கர் அருகே சென்றவள் “ சங்கர் இங்கு பாரு… நான் சந்தியாவிடம் போயிற்று அவளை கூட்டி வரட்டுமா? வாற வழியில் அனசையும் பார்த்திட்டு வாறன்.. சரியா““ சங்கர் சிரித்தபடி““ ஆகா அடிப்பாவி… அனசை பார்க்கப்போறாய் என முடிவாக்கிட்டு…இதுக்கை சும்மா எனக்கு உதவி செய்யுற மாதிரி.. நடிக்காதை..“ „“ வ்வ்வ்“ என நெளித்தபடி „“ மாமி நான் ஒருக்கா கடைக்குப்போட்டு உங்க வருங்கால மருமகளோடு வாறன்.. „“ என்றாள்.. “ சரி மது கவனம் காரிலை போறது… நான் சமைக்கப்போறன்“ என்றபடி சமையற்கட்டுக்குள் நுழைந்தார் மதுவின் மாமி .

மதுவை நேரில் கண்டபோது அனசன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இடையோடு அணைத்து உதடுகளில் முத்தம் ஒன்றை கொடுத்தான்.. அதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். திராட்சைத்துளிகள் பருகிய மயக்கத்தில் அவள் திண்டாடினாள்., அவனை தள்ளவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல்…அப்பப்பா சில நிமிடங்கள் அவள் பட்ட இன்ப அவஸ்தை வார்த்தைகள் கிடைக்கவில்லை அவனின் நெருங்கிய அருகாமையும் அந்த முதல் முத்தமும் தந்த தித்திப்பில் கண்களை மெல்ல மெல்ல மூடினாள்.. அவள் காதுகளில் “ மது மது என்னுலகமே நீதானடி..“ அனசன் முணுமுணுப்பது மட்டும் கேட்டது.. அந்த மயக்கத்தில் இருந்து விழித்தவளாய் அவனை விலத்தியபடி தன் உதடுகளையும் கன்னங்களையும் தடவி பார்த்து வெட்கத்தால் முகம் சிவந்தாள்.. பெண்மைக்கான நாணம் அவளுக்கு போர்வை போர்த்தியிருந்தது.

Merken