மே பதினெட்டு
வட்டுவாகல் பாலம்
அழுதழுது முகம்
சிவந்து கிடந்தது
அதன்மேலே ஏறி
லட்சத்தில் ஒருவனாய்
நானும் நடக்கிறேன்
எங்கே செல்கிறாய் என்மகனே…?
விழிமடல் மூடி என் தடம் பதித்த
உணர்வதை மேவி
என்னிடம் கேட்கிறது.
காயப்பட்டு இரு பக்கமும்
சிதறுண்டு கிடந்த அந்த பாலம்
„உயிர்தப்ப போகிறேன் „
என்றேன் நான்
இல்லை மகனே…!
நீ என்மகன்
என்னை விட்டு நீங்காதே
உரிமையெனும்
உணர்வுகள் சுமந்த உத்தமன்
நீ என்னைத் தாண்டி போனால்
நீ உயிர் வாழ முடியாது.
சிங்கள கயவன் உன்னை
சீரழிப்பான்.
சுதந்திரமாய் உன்னை
புணர்ந்தழிப்பான்
வஞ்சகர் கால்களில்
செருப்பாவாய்.
தேய்ந்து தேய்ந்து நீ
கருகும் மலராவாய்
காணாமால் ஆக்கப்படுவாய்
கரங்களில் விலங்கிட்டு
விலங்காய் நடத்தப்படுவாய்
உன் கண்முன்னே
உன் தங்கை துயிலுரியப்படுவாள்
போகாதே என்மகனே
வெள்ளைக் கொடியெல்லாம்
உன் இரத்தம் சிதறும்
வெண்புறா சிறகெல்லாம்
சிவப்பின் குருதி பெருகும்
வண்ணக் கனவுகள்
சிதறி மடியும்
உயிர் கூட
உறங்க மண்ணுக்குள் நகரும்
போகாதே என்மகனே…
பாலம் என்னை தடுத்தாண்டது…
உன் தம்பி நேற்று என்
உடல் தடவி நின்றான்
சென்றிக்கு நின்ற
அவனை தேடுகிறேன்
காணவில்லை
அவன் உடுத்திருந்த
குத்துவரியுடை மட்டும்
என் கரையோரம்
தசைத் துண்டுகளோடு
பிய்ந்து கிடக்கிறது
அவன் என் பிள்ளை
என் மேலே ஏறி
சவாரி செய்த என் குழந்தை
என்னை முத்தமிட்டு
தினமும் எதிரியை பிய்த்தெறிந்த
உன் தம்பி
நானறிவேன்
நீ வாழ அவன் கண்மூடி போனான்.
நான் தினம் மகிழ
தன்னை கொடையாக்கிச் சென்றான்
நீயோ உயிர்வாழ என்று
எனைக்கடந்து செல்கிறாய்
செல்லாதே என்மகனே
உன் கால்கள் என் கரையை
கடக்க முன்னே
அடிமையாக்கப்பட்டு
உன் தாகம் தணிக்க உன்
இரத்தத்தை உனக்கே
பருக்குவான் எதிரி
உன் தசைத்துண்டுகளே
பசி போக்க உணவாக்குவான்
பகைவன்
தன் கரங்கொண்டு தடுக்கிறது
வட்டுவாகல் பாலம்
தன் மொழி கொண்டு
என்னை தடுக்கிறது
எம்முயிர் பாலம்
நானோ எல்லாவற்றையும் கடந்து
நடந்து செல்கிறேன்
கம்பி வேலிகள் நோக்கி…
ஆக்கம் இரத்தினம் கவிமகன்…