அகளங்கன், வவுனியா, இலங்கை.
வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் நாகலிங்கம் தர்மராஜா. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணித, புள்ளிவிபரவியல் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்தவர். ஓய்வுநிலை ஆசிரியரான இவர் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவராகவும் பத்திற்கு மேற்பட்ட கலை, இலக்கிய, சமூக அமைப்புக்களில் பல்வேறு பொறுப்புக்களை வகிப்பவராகவும் இயங்கி வருகிறார். கவிதை, கட்டுரை, ஆய்வு, புனைகதை, மேடை நாடகம், நாட்டிய நாடகம், பா நாடகம், வானொலி நாடகம், குறும்படப் பிரதியாக்கம், இசைப்பாடல், கீதம், பேச்சு, புராண படனம், சிறுவர்பாடல், சிறுவர் உரைநடை, உரை விளக்கம் என பல்துறை அனுபவமுள்ளவர். நாற்பத்தி நான்கு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். அன்றில்ப் பறவைகள் ( வானொலி நாடகத் தொகுப்பு)-1992, சின்னஞ் சிறிய சிறகுகள் ( சிறுவர் பாடல்கள் ) -2012 உட்பட நான்கு நூல்களுக்கு தேசிய சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ளார். வடக்கு மாகாண அமைச்சின் சிறந்த நூற் பரிசு(ஐந்து), இந்தியத் தமிழ் நாட்டு விருது (இரண்டு) உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகள் மற்றும் பரிசில்கள் பெற்றுள்ளார். தமிழ் மணி, செம்பணிச் சிகரம் உட்பட பல்வேறு பட்டங்கள் பெற்றுக்கொண்டவர். இவர் எழுதிய ‚குழந்தையென எனது மனம் குதூகலிக்கும்'(மரபுக் கவிதை) க.பொ.த.சாதாரண தர தமிழ் மொழியும் இலக்கியமும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. “அம்புலி மாமா” என்ற தலைப்பிலான குழந்தைப் பாடல் கிழக்கு மாகாண முன்பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
மூத்தோரை முன்வைத்துயர்த்துவோம். தமிழ்மணி அகளங்கன் அவர்கள் பிரசவித்த கவியொன்றிதோ.
குழந்தையென எனது மனம் குதூகலிக்கும்
மாமரத்தின் கிளைகளிலே மந்தியினந் தாவி
மாங்கனிகள் பறித்துண்டு மகிழ்ந்து விளையாடும்
பூமரத்தின் இலைகளிலே வண்டினங்கள் மோதிப்
புதுமலர்கள் கோதி நறுமது அருந்தி ஆடும்
பாமரத்தின் பாட்டிசைத்துப் பசுங்குயில்கள் கூவிப்
பசுங்கிளிகள் புளகமுறப் பருவ இரை தேடும்
சாமரத்தின் ஒப்பாகச் சிறகடித்துக் கூடிச்
சதுராடும் மயில்களெனைக் கவிபாடவைக்கும்
தென்றலிலே அசைந்தாடும் செந்நெல் வயற் கதிர்கள்
தேனருவி என வழியும் ஏருழவன் வியர்வை
குன்றெனவே நிமிர்ந்தோங்கிக் குதூகலிக்கும் தோள்கள்
குணக்கு குன்றாய் உழைத்துண்ணும் குலவிளக்காம் மனிதன்
முன்றலிலே மண்ணளைந்து முழங்காலில் தவழ்ந்து
முத்து உதிர நகை செய்யும் சொத்தாகும் மழலை
கன்றினது உடல் நக்கிக் கனைக்கின்ற பசுக்கள்
கரைந்தழைத்து இரையுண்ணும் காக்கைகளின் கூட்டம்
பனிக்கூட்டம் விரட்டி வரும் பகலவனின் வீரம்
பசிக்கூட்டம் விரட்டிவரும் பண்புமிகு ஈரம்
கனிக்கூட்டம் அசைந்தாடும் கனிமரத்தின் சோலை
கருமுகில்கள் தவழவரும் கார்கால மாலை
தனித்து நின்று சத்தியத்தால் தலை நிமிரும் மனிதன்
தற்பெருமை கொள்ளாது தலை தாழும் அறிஞன்
இனித்தாலும் கசந்தாலும் இன் முகத்தைக் காட்டும்
இல்லாளின் இயற்கை எழில் எம்மனதை வெல்லும்.
குஞ்சிருக்கும் கூட்டினுக்கு இரையெடுத்துச் சென்று
குனிந்து அலகால் இரையூட்டும் குருவிகளின் பாசம்
நெஞ்சத்தை நிறைந் திருக்கும் நிர்மலமாம் வானில்
நிறைமதி தன் துணைவியர்கள் சூழ வரும் கோலம்
பஞ்செனவே திரண்ட முகில் பரவுகின்ற வானில்
பரிதி ஒளி விசி எழும் பரவசமாம் ஜாலம்
கொஞ்சி மகிழ்ந்து ஓடி விளையாடி வரும் அணில்கள்
கூரைகளில் கூடு கட்டல் கோடி அழன்றோ.
ஓடுகின்ற நீரை எதிர்த்து ஓடுகின்ற மீன்கள்
ஊருகின்ற சிற்றெறும்பின் ஒழுங்குமுறை வாழ்க்கை
ஆடுகின்ற பூமரங்கள் அசைகின்ற இலைகள்
அதிகாலை எழுந்து இரை தேடவரும் பறவை
மூடுகின்ற இமைக்கு அடங்கா முழுநிலவு விழிகள்
முந்தானைச் சேலைகட்டும் செந்தாழம் பூக்கள்
கூடுகின்ற இயற்கை எழில் குதூகலத்தைத் தருமே
குழந்தையென எனது மனம் குதித்து ஆடும் தினமே.