பேசும் பொருளும் பாடும் பொருளும்
பெண்மை என்ற நிலையாச்சு
பாரினில் பெண்ணின் நிலை
பரிதாபத்திற்குரியதாச்சு..
பட்டப பகலில் பெண்மை
படுபாவிகளின் கைகளில்
பரமாத்மா என ஓலமிட்டும்
பேதைகளின் குரல்களுக்கு
மதிப்பளிக்கும் மேதைகளிங்கில்லை..
மாதரை இழிவுபடுத்தும் மடமையை
கொளுத்து குரல் கொடுத்த பாரதியின்
கல்லறைக்கு கூட எம்குரல்கள்
இன்றுவரை கேட்கவில்லை.,
ஒற்றைத்தலை காதலுக்கு கழுத்தறுப்பும்
ஒவ்வாத பெண்களுக்கு தூற்றுதலும்
ஒருங்கே மேடையேறும்ஆதிக்க நாடகங்களும் கோலங்களும்
ஓ வென்ற பெண்களின் அலறல்கள்..
கத்துவதும் கண்ணீர் விடுவதும்
காலமெல்லாம்தொடரும் கதையாச்சு
கண்ணிருந்தும் குருடர்களாய் இன்னும்
கோடிக்குள் ஒதுங்கித்தான் போவாயா
பெண்ணே..
கடலாக நீ பொங்கி எழுந்தால்
கயவர்கள் தலைகள் நாளை உருளும்
கைகள் வளையல்களுக்கு மட்டுமல்ல
தூக்கட்டும் கைகள் எழுதுகோல்களை..
மாற்றட்டும் இந்த உலகத்தை..
அழிக்கவருபவனை துணிந்தே
அழிக்கும் பத்திரகாளியாகிவிடு
அழகான வதனத்தில் இனி
ஆயிரமாயிரம் சுட்டெரிக்கும்
சூரியர்கள் உதயமாகட்டும்..
அடங்குவதும் அடிபணிவதும்
பெண்கள் என்ற நிலையை மாற்று
ஆதிக்கவெறியர்களின் பேச்சை
அடியோடு நிறுத்த எழுந்து விடு
இனியும் நீ தூங்கினால் உன்
வாழ்வு இருட்டறையில் அல்ல கல்லறையில்தான்…
ரதி மோகன்
ஓயாதகவியலைகள்