31வது ஆண்டு நிறைவு காணும் யேர்மனி ஆடற்கலாலயம் (17.10.1989)யேர்மனி – கிறீபீல்ட் நகரில் இயங்கிவரும் ஆடற்கலாலயம் தனது 31வது ஆண்டை நிறைவு செய்து இன்று 17.10.2020 திகதியில் 32வது ஆண்டில் காலடி பதித்து. பிறந்ததினத்தை கொண்டாடுகின்றது. இதனை ஆரம்பித்து இன்றுவரை ஆசிரியராக இருந்துவரும நடன ஆசிரியர் ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார்¸ நடன ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்¸ ஏனைய நடன ஆசிரியர்கள்¸ நடனமணிகள்¸ பழைய மாணவர்கள் அனைவரையும் இந்நாளில் வாழ்த்துவதில் பெருமைகொள்கிறோம்.இந்த ஆடற்கலாலயத்தில் கடந்த 31 ஆண்டுகளில் 500 – 600 வரையிலான மாணவ மணிகள் நடனக்கலையைப் பயின்றிருக்கிறார்கள். தற்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட மாணவமணிகள் நடனக்கலையைப்பயின்று வருகிறார்கள். இக்கல்லூரியில் இது வரை சுமார் 25 மாணவ¸ மாணவிகள் அரங்கேற்றம் கண்டிருக்கிறார்கள். இங்கு அரங்கேற்றம் கண்ட மாணவமணிகள் இங்கிலாந்து¸ கனடா¸ யேர்மனி மற்றும் ஐரோப்பிய தேசங்களில் வாழ்ந்து வருகிறார்கள். யேர்மனியில் இந்த நடனக்கல்லூரி ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களுக்கு ஒரு கௌரவமும் மரியாதையும் சிறப்பும் உண்டு. அந்த அளவிற்கு அவரின் சிறப்புக்களை அவரது மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வுகளில் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பல தடவைகள் பெற்றிருக்கிறார். நேர்த்தியான நடனம்¸ நல்ல நட்டுவாங்கம்¸ அழகான உடை அலங்காரம்¸ மாணவர்களின் ஒழுக்கம்¸ கட்டுப்பாடு¸ சிறப்பு என அனைத்துத் தரப்பினராலும் வாழ்த்தைப் பெற்றார். இவரின் முன்னேற்றத்திற்கும் இந்த ஆடற்கலாலயத்தை இவ்வளவு காலமும் வளர்த்தெடுத்த பங்கு என்று கூறினால் அவரது கணவர்¸ சமூக செயற்பாட்டாளர் திரு சத்தியகுமார் அவர்களின் பங்கும் சேவையும் பாராட்டப்படவேண்டிய விடையமாகும்.இவர்கள் ஒரு கலைக்குடும்பமாகும். அரங்கேற்றம் கண்ட இவரது மகளும் மகனும் இந்தக் கல்லூரியில் இன்று பல மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களாகக் கடமைபுரிந்து வருகின்றார்கள். அத்துடன் அவரிடம் அரங்கேற்றம் கண்ட மாணவமணிகள் தற்போது இக்கல்லூரியில் நடன ஆசிரியர்களாகக் கடமைபுரிந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவமான பரத நாட்டியத்தை எதிர்கால தமிழ்ச்சந்ததிகளுக்கு ஊட்டி¸ தாய்மொழியாம் தமிழையும் கலை¸ பண்பாடு¸ பாரம்பரியங்களையும் கட்டிக்காத்து பரதக்கலைக்கு உயிர் ஊட்டிவரும் றெஜினி சத்தியகுமார் அவர்களின் நீண்டகால கலைப்பணியைப் போற்றி வாழ்த்துவோம்.செல்வன் நிமலன் சத்தியகுமார்..தனது தாயாரைப்போல இவரும் நடனக்கலையில் அதீத தாகம்கொண்டவராவர். நடன ஆசிரியர் றெஜினி சத்தியகுமார் அவர்களின் புதல்வனான நிமலனை குழந்தையாய் சிறுவனாய்¸ மாணவனாய்¸ இளைஞனாய் அவரின் திறமைகளை என்போன்ற பலர் கண்டு வியந்திருக்கிறார்கள். இன்று அவரை ஒரு நடன ஆசிரியராகக் காண்கிறோம். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நடன ஆசிரியராக இருந்து பல நூறு மாணவமணிகளுக்கு நடனம் கற்பித்து வருகின்றார். இவர் யேர்மனி மட்டுமல்லாமல் ஐரோப்பா நாடுகள் கனடா நாடு என அனைத்து நாடுகளுக்கும் சென்று நடன நிகழ்வுகளை நடத்தியதுடன்¸ பல நடனப்போட்டிகளில் பங்குகொண்டு பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறார்.இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து யேர்மன் மொழியைக் கற்றாலும் நம்தாய் மொழியாம் தமிழையும் பரதக்கலையையும் கற்று இன்று ஒரு நடன ஆசிரியராகவும் கடமைபுரிகின்றார். சந்ததி சந்ததியாக நடனத்தைப் பயிற்றுவிக்க அடுத்த சந்ததியும் உருவாகிவிட்டார்கள். இவரை உருவாக்கிய பெற்றோர் உண்மையில் பாராட்டப்படவேண்டியவர்களே. குருவை மிஞ்சிய சிஷ்ஷன் உருவாகிச் சாதனை படைத்துவரும் நிமலன் அவர்களுக்கும். அவரோடு சேர்ந்து இந்தக் ஆடற்கலாலயத்தில் நடனம் பயிற்றுவிக்கும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் மாணவ மணிகளுக்கும் நன்றிகலங்த பாராட்டுக்கள். இந்த ஆடற்கலாலயத்தின் நீண்டகால சேவையானது தமிழுக்கும் தமிழ்க்கலைக்கும் செய்துவரும் மாபெரும் தொண்டாக எண்ணி இன்றைய நன்நாளில் வாழ்த்துவோம். போற்றுவோம்!..புலம்பெயர் நாடுகளில் எமது இனம் வாழும் காலம்வரை தமிழ்கலைகளும் வளரும் என நம்பலாம்!..வாழ்த்துக்களுடன்!..பிரதம ஆசிரியர் – “மண்” சஞ்சிகை – யேர்மனி – 17.10.2020