வீணை உடம்பு மீட்ட விரல்கள்…

கவி மீட்ட குறி விரலும்
வளைந்து நெளிந்த 
இசை நரம்புகளும்
மூச்சின் ஒலிப்பதிவில்
பாடலைத் தந்தது.
வீணை உடம்பு நனைந்தது.

ஒரு சாண் நிலத்தில்
பூக்களின் தொகை
இங்கு தான் அதிகம் பூத்தன.

விழி மலர்த்திய 
ஒவ்வொரு பாகமும்
வெற்றிலை பாக்கை 
சுண்ணாம்பு தடவி
மென்று துப்பியது.

உயிரியல்ப் போரில்
வெண் இரத்தம்
களமாடிய உணர்வுகளை
களைப்பாறச் செய்தது.

புல்லரித்த அணுக்கள்
புதுப் புது பூமிகளைச் செய்தன.
வல்லின நகங்களின் கிறுக்கல்களுக்கு
மெல்லினம் விழிகளால் மருந்திட்டது.
இதழ்களின் சண்டைச் சத்தம்
கீரவாணி ராகமாய்க் கரைந்தது.

சிதறிக் கிடந்த முத்தச் சன்னங்களை
அள்ளிச் சேர்த்த போது தான்
அவசரத்தில் தலையணைக்கு
கொடுத்த முத்தம் அதிகம் என்று தெரிந்தது…

கலைப்பரிதி