இன்று பதவிக்காய்
பலகட்சி அமைத்து
பறிபோன அதிகாரத்தை
பாழுங்கிணற்றில் போடும்
பெருமக்களே!
வீரிய தேசத்தின்
செந்தமிழால் விழா எடுத்த தேசத்தின்
எம் பாட்டனின் சீரிய நேர்மையால்
செழித்த தேசத்தின்
கச்சைகள் உரியப்பட்டு
மார்பிடையில்
கந்தக வெடிகளை கட்டிய நாட்களை
காவாலிச் சிங்களன் கடவாயில்
ஒழுகிய என் தோதரிகளின்
புனிதக் குருதியால்
சிவந்துபோன
ரணமிகு நாட்களை நான் மறக்கமாட்டேன்
இறால் வளர்த்த நந்திக்கடலில்
தமிழன் சதைகளை
கொட்டிப்பரவிக்
கோர நடனமாடிய குண்டு நாட்களை
எப்படி மறப்பேன்…?
நரை மலர்ந்து
உடல் நலிந்த தேகத்தில்
கரைபுரண்டோடிய
குருதியாற்றை
கைகொண்டு அணைத்துத்
தோற்றுப்போன
சுதந்திரபுரத்தின் சிறைபட்ட
நாட்களை எப்படி மறப்பேன்
வடிந்ததும் துடைத்தெறிந்து
கடந்துபோக அந்நாட்கள்
என்ன மூக்கில் வழியும் திரவமா…?
இல்லை
செங்குருதியால் குளித்த நாட்கள்
மணல் தின்று
உடல் நொந்த மாத்தளன் கரை
மீதொரு காதுவைத்துக்
கேளுங்களேன்
நிகழ்ந்த அவல ஒலி
நெஞ்சை நெருடும்
இன்று பதவிக்காய்
பலகட்சி அமைத்து
பறிபோன அதிகாரத்தை
பாழுங்கிணற்றில் போடும்
பெருமக்களே!
உடைபடும் இரு கட்சி
இரு வேறு குழுக்களாகி
அடிபாட்டில் முடியும்
பின் அன்றொருநாள்
நினைவில் வரும்
„வீடு இரண்டுபட்டால்
கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்..“
கொண்டாட்டம்
தொடங்கித் தெருவெல்லாம்
கூத்துகள் நடக்கிறது
சேர்ந்திருப்பதன்
சிறப்பறியாது
சேற்றிலொருகாலை
செந்தீயிலொருகாலை வைத்து
குத்துதே குடையுதே என
மீண்டும் கூட்டாகும்
நாளும் வரும்
அதுவரை குத்தாடம்
களைகட்டட்டும்
பிரிதல்
கழிதல் அவசியம்தான்
இல்லையேல்
விடியல்பற்றிய கனவு வராதே!!
விரட்டி விரட்டி
அடிபடும் நாளில்
விலகிய கிளைகள் ஒன்றாய்
ஒட்டும்
வலி மறந்து
நிலைமறந்து
வந்த தடம் மறந்த
சில வயோதிபக் காதுகளை
முள்ளிவாய்க்கால் தரையில்
அழுத்தியெடுத்திருந்தால்
இந்த அடிபாடு வந்திருக்காது
– அனாதியன்-