வாயிருந்தும் ஊமையாய் .!கவிதை கவிஞர் ரதிமோகன்

கைகளில் விலங்கிட்டு
கண்களை கட்டிவிட்டு
கவிதையா கேட்கிறாய்
கனவுகளை தொலைத்து
உணர்வுகளை இழந்த
என்னால் எப்படி இனி
எழுத முடியும்…

வாயிருந்தும் ஊமையாய்
நாடிருந்தும் அகதியாய்
நொடிக்கொருதடவை
தாய்மடி தேடி அழும்
தேய்ந்து போன நிலா
நானென்று எப்படி
சொல்வேன்…

அந்த நிலாவிற்கும்
ஒரு பௌர்ணமி உண்டு
இனி இந்த நிலாவுக்கு
இல்லை என்றும் பௌர்ணமி
இனியாவது இந்த காகிதங்களை
எடுத்து சென்று விடு…

நானும் என் தேசமும்
சுதந்திரக்காற்றை
சுவாசிக்கும் பொழுது
விரைந்து வா
அப்பொழுது எழுதுகிறேன்
ஒன்றல்ல ஆயிரமாயிரம்
கவிதைகளை….,

ரதி மோகன்