வானத்தில் ஏறி…. -இந்துமகேஷ்

இருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதி!
அவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி.
வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை அந்த நிலைக்கண்ணாடியின மீது ஊதுகிறான்.
இப்போது அந்தக் கண்ணாடிக்குள் வெளி உலகம் தெரிகிறது.
எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கப்பால் நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை அவன் பார்க்கிறான்.
தனது எதிரி ஆபத்துக்குள் சிக்கி அவலப்படுவது தெரிகிறது. சத்தம் போட்டுச்சிரிக்கிறான்

-சிறுவயதில் படித்த மாயாஜாலக் கதைகளில் இப்படி விபரிக்கப்படும் சம்பவங்கள் அதிகம்.
இதெல்லாம் நடக்குமா? இவைகளெல்லாம் வெறும் கற்பனைகள் என்று அப்போது தோன்றியது.

பூட்டிய சிறு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு கணணித்திரையில் தோன்றும் காட்சிகளைப் பார்க்கும்போது அந்த
மந்திரவாதிகள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

மந்திரவாதியின் நிலைக்கண்ணாடியாய் கணனித் திரையும். வாய்க்குள் முணுமுணுக்கும் மந்திர வார்த்தையாய் கணனியைத் திறக்கும் இரகசியச் சொல்லும், விரியும் காட்சிகளில் உலகின் மறுமூலையில் நிகழும் காட்சிகளும் என்று….
முன்னைய மனிதர்களின் கற்பனைகள் இப்போது நிஜவடிவில்!

இன்றைய உலகின் முன்னேற்றமெல்லாம் விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்கிறார்கள்.
சரி. விஞ்ஞான யுகத்தின் ஆரம்பம் எப்போது?

கம்பராமாயணத்தில் ஒரு காட்சி-
„சீதையைக் கவர்ந்துசெல்ல சந்நியாசி வேடமிட்டு வந்த இராவணன் அவளைத் தீண்ட முடியாமல் அவள் இருந்த குடிசையுடன் சேர்த்து அவளைத் தூக்கி தனது புட்பகவிமானத்தில் ஏற்றிக்கொண்டு இலங்கைநோக்கிச் சென்றான்“ என்று
அந்தக் காட்சி விபரிக்கப்படுகிறது.

„விமானம் கண்டுபிடிக்கப்பட்டது எப்போது? விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார்?“ என்ற கேள்விகளுக்கு பாலர்பருவத்தில்
விடையளித்தபோது-
விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள். அமெரிக்காவின் வடகரோலினா மாகாணத்திலுள்ள கிட்டிகாக் என்ற
இடத்தில் 1903ம் ஆண்டு டிசம்பர் 17ம் திகதி முதன்முதலாக விமானத்தை ஓட்டினார்கள் என்று எழுத முடிந்தது.

அதற்கு முன்பும் இந்த உலகத்தில் விமானம் இருந்ததா இல்லையா?
இருந்தது. ஆனால் இவர்கள் காலத்தில் அது தெரியாமல் மறைந்திருந்தது. இவர்கள் அதைக் கண்டு பிடித்தார்கள்.
„கண்டுபிடிப்புக்கள்“ என்ற வார்த்தைக்குள் அடக்கப்பட்டவை எல்லாமே ஏற்கனவே இருந்தவைதாம்.
புதிதாக அவை உருவாக்கப்பட்டவையல்ல. கண்டுபிடிக்கப்பட்டவை.

கண்டுபிடிப்புக்கள் அனைத்துமே மனித வாழ்வை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லத் தக்கவைதான்.
பல்லாயிரக்கணக்கான மைல்கள் தூரத்தை ஒருசில மணித்துளிகளுக்குள் கடந்து செல்ல உதவும் விமானங்கள் மனிதர்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்தியிருக்கின்றன என்பது உண்மை.
அதேசமயத்தில் விபத்துக்கள் என்ற பெயரில் ஏராளமான உயிர்களை அவை பலிகொண்டுமிருக்கின்றன.

கடந்த 13 ஆண்டுகளில் மட்டும் இந்த உலகில் இடம்பெற்ற 400க்கும் அதிகமான விமான விபத்துக்களில் ஆறாயிரத்துக்கும்
அதிகமான உயிர்களை அந்த விமானங்கள் பலிகொண்டிருக்கின்றனவாம்.
அமெரிக்க போயிங் விமான நிறுவனம் எடுத்த புள்ளிவிபரம் இந்தக் கணக்கைத் தருகிறது.

விபத்துக்கள் நேர்கின்றன என்பதற்காக விமானப் பயணத்தைத் தள்ளிப் போட்டுவிட முடியுமா?
விபத்துகள் நேராவிட்டால்மட்டும் விமானங்களால் ஏற்படும் உயிரிழப்புக்களை மனிதன் தவிர்த்துவிட முடியுமா என்ன?

„எமது போர்விமானங்கள் மூலம் பகையாளி மக்களைப் பல்லாயிரக்கணக்கில் பலிகொள்ள எங்களால் முடியும்!“ என்று பல நாடுகள் „சாதனை“ புரிந்துகொண்டிருக்கின்றன.
உள்நாட்டுப் போர் என்றும் வெளிநாட்டுப் படையெடுப்பு என்றும் விமானப் படையை ஏவிப் பெருமளவிலான மனித அழிவை ஏற்படுத்த முனையும் நாடுகளுக்கு முக்கிய கருவியாக இருப்பதும் விமானங்கள்தாம்.

இன்னும் இன்னும் என்று பலநாடுகளும் வாங்கிக் குவிக்கின்ற படைக்கலங்களில் போர் விமானங்களின் எண்ணிக்கையே அதிகரித்துச் செல்கிறது.
நாடுதாண்டிய உறவை வளர்க்க உதவும் விமானங்களுக்குப் பதிலாக நாடுதாண்டிக் கொன்று குவிப்பதற்கு உதவும் விமானங்களே இப்போது அதிகமாக கொள்வனவு செய்யப்படுகின்றன.

இந்த உலகத்திலிருந்து மனித இனத்தைச் சுத்தமாகத் துடைத்தழிப்பதற்கு இயற்கை தீர்மானித்திருக்கிறதோ என்னமோ ஆனால் மனிதன் எப்போதோ அதற்குத் தயாராகிவிட்டான்.
அதனால்தான் மனிதன் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்ற ஆராய்ச்சியிலும் அவன் இப்போது தீவிரம்காட்டுகிறான்.

மனிதன் இல்லாத உலகம்; இருக்கட்டும்
உலகம் இல்லாத மனிதனின் நிலை என்ன?

(பிரசுரம்: வெற்றிமணி -ஜெர்மனி வைகாசி 2012)