வாசிக்கும் போதே
மொழி பெயர்க்கப்பட்டால் தான்
அது கவிதை
நேசிக்கும் போதே
புரிந்து கொள்ளபட்டால்தான்
அது காதல்
சுவாசிக்கும் போதே
உணர்ந்து கொள்ளப்பட்டால் தான்
அது வாழ்வு
கால வெள்ளத்தில்
நரைத்துப்போன
வாழ்வனுபவங்களின்
நினைவுகள் கூட பெரும்வலிதான்
வலிகளும் வாழ்வும்
பழகிவிட்டதால் எந்த அடியும் அவமானமும் தாங்குவது
இயற்கையாகி விடுகிறது.
பாதாளத்தை நோக்கி
உருட்டி விடப்பட்ட
பந்து போலத்தான்
வாழ்வியலும் சிந்தாந்தமாய்
விழுந்த பக்கமெல்லாம் அடியும்
விழும் பக்கமெல்லாம் வலியும் கொண்டு
பல பக்கங்கள் கொண்ட வாழ்வினில்
சில பக்கங்கள் தான்
உணர்வினில் உயிரையே வருடும்.
அந்த சில பக்கங்களுக்காக பல பக்கங்கள் வெற்றுக் கோடுகளாக வெள்ளாந்தி மனிதர்களாக …..
புரிந்து கொள்ள முடியா
வெறுமையாக
புரிந்து கொள்ளப் படுகின்றன
ஆக்கம் இணுவை சக்திதாசன்