02.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைந்துள்ள தமிழர் அரங்கம் மண்டபத்தில் சிவா சின்னப்பொடி அவர்களின் ‚நினைவழியா வடுக்கள்‘ நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ‚பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்‘ நடத்திய இந் நிகழ்வில் ஒன்றியத்தின் தலைவர் ஏலையா முருகதாசன் அவர்கள் சாதியத்தின் கொடுமை பற்றியும், ‚நினைவழியா வடுக்கள்‘ நூலின் முக்கியத்துவம் பற்றியும் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
சபேசன். தேவனும். ஆய்வுரையை செய்தார்கள் ஆறுமுகநாவலரின் சாதிய முகத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி என்று குறிப்பிட்ட தேவன், சாதிகளின் பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஈழப் போராட்டத்தில் சாதியத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்த நூல் பேசவில்லை என்றும் சொன்னார்.
1960களில் நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்களையே நூல் பதிவு செய்துள்ளது என்றும், பலர் குறிப்பிடுவது போன்று ‚சாதி பற்றி பேசாது இருந்தாலே அது அழிந்து விடும் என்று பலர் சொல்வது மோசடியானது என்றும், எதிர்ப் போராட்டங்களின் மூலமே சாதியத்தின் வீரயம் ஈழத்தில் குறைக்கப்பட்டது என்பதற்கு இந்த நூல் ஆதாராம் என்றும் சபேசன். உரையில் குறிப்பிட்டார். ஈழப் போராட்டத்தின் பொது சாதியத்தை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தனியாக ஒரு நூல் எழுத வேண்டும் என்றும் சிவா சின்னப்பொடி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்
ஆய்வுரைகளை தொடர்ந்து சிவா சின்னப்பொடி அவர்கள் ஏற்புரை வழங்கினார். தனக்கு நேர்ந்த சாதியக் கொடுமைகளை சிவா சின்னப்பொடி அவர்கள் கூறிய பொழுது, சபை அதிர்ச்சியுடன் உறைந்து போயிருந்தது.
ஏற்புரையின் பின்னர் சபையோருடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. உயர்சாதியினர் மட்டும் அடக்குமுறையில் ஈடுபடவில்லை, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும் சாதிய வேறுபாடுகள் உண்டு என்றும் சிலர் தெரிவித்தனர். சாதியத்திற்கு பிராமணியமே காரணம் என்ற குரலும் சபையில் கேட்டது. சிவா சின்னப்பொடி அவர்கள் சந்தித்த அனுபவங்கள் குறித்த வேதனையை பலர் வெளிப்படுத்தினார்கள். இதையெல்லாம் தாண்டி அவர் சாதித்திருப்பதை பாராட்டினார்கள். சாதியத்தை பேசாது விடுவதே நல்லது என்ற கருத்தும் அங்கே வெளிப்பட்டது.
எல்லாக் கேள்விகளுக்கும் சிவா சின்னப்பொடி அவர்கள் ஆழமான பதிலை வழங்கினார். அவரிடம் இருந்து பல தகவல்களை பெறக்கூடியதாக இருந்தது. பல்வேறு கருத்துக்களுடன் மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக அது அமைந்திருந்தது. நிகழ்வு முடிந்த பின்னரும் பலர் கூட்டம் கூட்டமாக நின்று சாதியக் கொடுமைகள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஈழப் போராட்டத்தின் போது கட்டப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சாதியம் தற்பொழுது மீண்டும் தன்னுடைய அடக்குமுறைக் கரங்களை நீட்டத் தொடங்கியுள்ள நிலையில், 60களில் சாதியத்திற்கு எதிரான போராட்டம் எப்படி நடந்தது என்பது பற்றிய நூல் அறிமுகமும் அதுபற்றிய விவாதங்களும் தவிர்க்க முடியாதபடி மிகுந்த முக்கியத்துவம் பெற்று நிற்கின்றன.