ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய பாக்கியம் பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வு.
மாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் அறவிடாது இலவசமாகவே நடாத்தப்படும் பாலர் பாடசாலையாகிய யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் இயங்கும் பாக்கியம் பாடசாலையில் 2019ஆம் ஆண்டின் கலைவிழா நிகழ்வானது 06.11.2019 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. பாடசாலையின் இயக்குநர் லதா கந்தையா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இணை பிரதம விருந்தினர்களாக கிருபா லேணர்ஸ் அதிபர் ‚சமூகதிலகம்‘ அ.கிருபாகரன், யோ.புரட்சி ஆகியோர் பங்கேற்றனர். யாழ்ப்பாணம் பொது நூலக நூலகர் திருமதி சு.சதாசிவம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முன்னதாக விருந்தினர் வரவேற்பு இடம்பெற்றது. சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ்மொழி வாழ்த்தினை பாக்கியம் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இசைத்தனர். இறைவணக்கத்தினை மாணவர்கள் வழங்கினர். தொடர்ந்து ஆத்திசூடி ஓதப்பட்டது.
வரவேற்புரையினை ஆசிரியை விஜயேந்தினி வழங்கினார். நிகழ்ச்சிகளை மாணவி சுகநிதா தொகுத்தளித்தார். ஆரம்ப நிகழ்ச்சியாக பாலர் பாடசாலை மாணவர்களின் குழுப்பாடல் இடம்பெற்றது. தலைமையுரையினை பாடசாலையின் இயக்குநர் லதா கந்தையா நிகழ்த்தினார். தொடர்ந்து மாணவர்களின் நடனம், பேச்சு, நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்வில் மழலைகளுக்கான பாராட்டுதல்களை இயற்கைவழி இயக்கம் அமைப்பின் குலசிங்கம் வசீகரன், மூத்தோர் சார்பில் சோதி ஐயா, மின்னூல் வெளியீட்டாளர் யாழ்.பாவாணன், யாழ் களரி ஆசிரியர் ஜெஸ்ரின், ஐ.பி.சி தொலைக்காட்சி பணியாளர் சர்மிளா வினோதினி ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து ஈழப்பரப்பின் தமிழ்சார் புகழ்மிக்கோர் வேடமிட்டுஅவர்கள் சார்ந்த அறிமுகத்தினை மாணவர்கள் வழங்கியமை சிறப்பளித்தது.
பிரதம விருந்தினரான கிருபா லேணர்ஸ் அதிபர் ‚சமூகதிலகம்‘ அ.கிருபாகரன் உரை நிகழ்த்தினார். பெற்றோர் சார்பில் ஜீவராணி கருத்து வழங்கினார். தொடர்ந்து யோ.புரட்சி உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசளிப்பு, ஆசிரியர் கெளரவிப்பு, பெற்றோர் கெளரவிப்பு என்பன இடம்பெற்றன. நன்றியுரையினை ஆசிரியை சூரியா வழங்கினார்.
ஈழப்போரின் இறுதிக் காலத்தில் பலியான தரணிகன் எனும் மழலையின் நினைவோடு அவரது தாயார் லதா கந்தையா அவர்கள் இப்பாலர் பாடசாலையினை இலவசமாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.