வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், தனது பள்ளிக் காலத்திலேயே ‚இவளின் ஏக்கம்‘ எனும் கவிதை நூலினை வெளியீடு செய்தவருமான மெ.புவஸ்ரினா அவர்களின் இரண்டாவது கவிதை நூலான ‚என்று தணியும்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 17.12.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வுக்கு யாழ்.மத்திய கல்லூரி ஆசிரியர் திருக்கேதீஸ்வரன் தலைமை வகித்தார். வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும், யாழ்.மத்திய கல்லூரியின் தற்போதைய பிரதி அதிபருமான திருமதி ரி.எஸ்.ஆர் செல்வகுணாளன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
வரவேற்பு நிகழ்வினைத் தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டன. அகவணக்கதினை அடுத்து வரவேற்பு நடனத்தினை அ.சபேஸ்ரா வழங்கினார். வரவேற்புரையினை ஆசிரியர் திருக்கேதீஸ்வரன் வழங்கினார். ஆசியுரையினை அருட்பணி ஜெனிஸ்ரன் அடிகளார் வழங்கினார். யாழ்.மத்திய கல்லூரி அதிபர் எழில்வேந்தன் , டான் தொலைக்காட்சி முகாமையாளர் பண்பலை வேந்தன் ரி.எஸ்.முகுந்தன், இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் சரா புவனேஸ்வரன் ஆகியோர் வழங்கினர். வெளியீட்டுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார்.
நூலினை யாழ்.மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை யாழ்.மத்திய கல்லூரி அதிபர் எழில்வேந்தன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் நூல்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நூலாசிரியரை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நூலின் ஆய்வுரையை படைப்பாளரும், யாழ் மாநகர சபை ஆணையாளருமான இ.த.ஜெயசீலன் நிகழ்த்தினார்.
பிரதம விருந்தினர் உரையினை திருமதி ரி.எஸ்.ஆர் செல்வகுணாளன் நிகழ்த்தினார். ஏற்புரையினை நூலாசிரியர் மெ.புவஸ்ரினா வழங்கினார்.
இருபது அகவையினை உடைய மெய்யழகன் புவஸ்ரினா அவர்கள் தனது அயராத முயல்வினால் இரண்டாவது நூலினை வெளியீடு செய்திருக்கின்றமை ஈழத்துப் பெண் படைப்பாளிகளுக்கு பெருமையே.