பள்ளிப் பருவத்தில் நாம் படித்த கதைகளில் அடிக்கடி நினைவுக்கு வருகின்ற கதைகள் இரண்டு.
ஒன்று ஆமையும் முயலும்.
மற்றது சிங்கமும் முயலும்.
இந்த இரண்டு கதைகளிலும் கதையின் நாயகன் முயல்.
சிங்கம், புலி, யானை, கரடி, குரங்கு, கழுதை, கங்காரு, ஒட்டகச்சிவிங்கி, மான் என்று இன்னோரன்ன மிருகங்களை நேரில் பார்ப்பதற்கு நான் பத்துவயதைத் தாண்டவேண்டியிருந்தது.
கொழும்பு மிருகக்காட்சிச் சாலையில் இவைகளைக் காணும்வரை பாடப் புத்தகங்களில் உள்ள படங்களில்தான் இவைகளைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.
பெரும்பாலான உயிரினங்களை பள்ளிக்கூட வகுப்பாசிரியர்கள்தான் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். குழப்படிகாரர் என்று பெயரெடுத்த சக மாணவர்களை ஆசிரியர் வார்த்தைகளால் தாக்கும்போது சில மிருகங்கள் இப்படித்தான் இருக்குமாக்கும் என்று ஊகிக்க முடிந்தது. கழுதை, எருமை, குரங்கு, மாடு, நாய் என்பன அதிகமானவர்களின் வசவுகளுக்குப் பயன்படும் விலங்கினங்கள் என்பது யாவரும் அறிந்ததே.
இப்போது முயலின் கதைக்கு வருவோம்.
என் சிறுவயதில் நான் பாடப்புத்தகங்களில் பார்த்த மிருகங்களில் ஒன்றாகத்தான் முயலும் எனக்கு அறிமுகமாயிற்று. அப்போது எங்கள் ஊருக்குள் முயல்கள் இருந்தனவா என்பது எனக்குத் தெரியாது. நானறிந்தவரையில் இல்லை. அல்லது என் கண்ணில் படவில்லை. படித்த கதைகளில் இருந்துமட்டுமே முயலைப்பற்றி அறிந்துகொண்டேன்.
முயல் அழகானது மென்மையானது, தாவர உணவுகளையே உண்பது, நீண்ட காதுகளை உடையது, வேகமாக ஓடக்கூடியது, புத்திக்கூர்மை உடையது, செல்லப்பிராணியாக பல வீடுகளிலும் வளர்க்கப்படுவது என்றெல்லாம் தெரிந்துகொண்டேன்.
பள்ளிப் பாடங்களின் போது கதைகளைப் படங்களாக வரைந்து வந்து கரும்பலகையின் மேல் பொருத்திவிட்டு வகுப்பாசிரியர் பாடம் நடத்தும்போது அதிலுள்ள விலங்குகள் எல்லாம் உயிர்பெற்று ஓடித்திரிவதாகக் கற்பனை விரியும்.
தன் இனத்தைக் கொல்லவரும் சிங்கத்தை தனது புத்திக்கூர்மையால் ஏமாற்றி அதைக் கிணற்றுள் தள்ளிய குட்டிமுயலின் கெட்டித்தனம் முயல்மீது ஒரு பற்றுதலை ஏற்படுத்திவிட்டிருந்தது.
சிங்கமும் முயலும் கதையில் வரும் முயலின் கெட்டித்தனம் ஆமையிடம் எடுபடாமல் போயிற்றே ஏன்? என்ற கேள்வி, ஆமையும் முயலும் கதையைப் படித்தபோது எழுந்தது.
தனது வலிமையில் அதற்கிருந்த அழுத்தமான நம்பிக்கைகூட அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்குமோ? ஆமையால் என்னை விஞ்சிவிட முடியாது என்ற பெருநம்பிக்கையில் அது சற்று ஓய்வெடுத்துக் கொண்டதால் வந்த விளைவுதானோ அது?
போட்டி என்று வரும்போது எச்சரிக்கையாக இருந்திருக்கவேண்டாமா? ஆமை தன்னைப் போட்டிக்கு அழைத்தபோதே அதன் நோக்கத்தை முயல் தெரிந்திருக்கவேண்டாமா?
ஆமை அசைந்துஅசைந்து போவதற்குள் கொஞ்சம் அமைதியாகலாம் பின்னர் ஒரே பாய்ச்சலில் எல்லையை எட்டிவிடலாம் என்ற முயலின் கணிப்பு தவறாயிற்று. ஆமை தான் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துக்கொண்டது. ஆனால் உண்மையாகவே போட்டி என்று வந்திருந்தால் முயல்தான் வெல்லும் என்ற உண்மையை உலகம் அறியும். முயலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க ஆமையால் முடியும் என்பது வெறும் கற்பனை.
ஆனால் ஆமையும் முயலும் கதை சொல்லும் தத்துவம் என்று ஒன்றுண்டு. ஆமை முயலை வென்றது என்று சொல்வதைவிட, முயல் ஆமையால் (முயலாமையால்) தோற்றது என்பதே பொருத்தமானதாக இருக்கும். இந்த முயலாமைக்குக் காரணம் அது தன் திறமையில் கொண்டிருந்த அளவுக்கதிகமான நம்பிக்கைதான் என்பதோடு அது தன் எதிராளியைச் சரியாக எடைபோடத் தவறியதும்தான். போட்டி என்று வந்துவிட்டால் ஆமையும் முயலும்போது, முயல் ஆமையால் தோற்றது என்பது வருத்தத்திற்குரியதுதான்.
உயிரினங்கள் பாடம் கற்றுத் தருகின்றன.
உயிரினங்களில் சிறந்த மனித இனம் பாடம் கற்பதற்குத் தயாராக இருப்பதில்லை.