முதற் காதல்…

குடை சாய்ந்து போன 
அந்தக் கன்னக்குழியை,
வெட்டும் மின்னல் விழியை
இன்னும் கண் வைத்தபடி நான்.
குறலி வித்தைக் காரனாய்
கூத்தாடியது என் முதற் காதல்.
செவியைப் பிடித்து முறுக்கி
மணி கட்டிய மாடாட்டம்
இன்று தோல்வியின் ஞானப் போதிப்பு.
அந்தக் காலங்களைப் புரட்ட
மனபலத்தில் காலநிலைப் பாதிப்பு.

இமை அம்புகளை ஏவிய விழி வில்லை
பழி சொல்லித் திட்டியது
குழிகளுக்குள் கிடந்த படி 
அன்று என் குற்றுயிர்க் காதல்.
இரவுகளை இறுகப் பற்றிய படி
இதயத்தின் சிவராத்திரிகள் தொடர்ந்தன.
இடைவிடாத மழையின் சாரல்.
மரணித்துப் போனதென்று எப்படி?
வானமாய் நீண்ட அந்த சுவாசிப்பு
வானவில்லாய் எப்படி மறைந்து போகும்.

பட்ட மரத்திலும் பாலூறும் என்பது
என் முதற் காதலால் நான் பார்த்தது.
நட்சத்திரங்களை அள்ளி வந்து
நந்தவனம் செய்து அதில் நாமும் பூத்தது.
இறகு இல்லாமலே பல முறை
நான் வானத்தில் வட்டமிட்டிருக்கிறேன்.
சொப்பனங்களோடு நான் தர்க்கப்பட்டிருக்கிறேன்.
அவளை சித்திரம் கீறி நான் விற்கப்பட்டிருக்கிறேன்.

நினைவுகளை அணைத்து அணைத்து
நான் கற்பமடைந்திருந்த காதலன்.
புலன்களுக்கு இது விசித்திரம் தான்.
பிரசவம் காண விதி இல்லைப் போலும்.
காதல் பிறக்காமலே கரைந்து விட்டது.
குளிர்களி கூட சுடு தணலாய் சுட்டது.
என் முதற் காதல்
மடியில் போட்டுத் தாயாய்த் தாலாட்டியது 
மரித்துப் போகாத என் மனதை வைத்து….

கலைப்பரிதி.