புலம் பெயர்ந்த நாடுகளில் புத்தக விழா அந்த வகையில் கடந்த ஞாயிறு 22.10.2023 அன்று துகள் அமைப்பினரால் ஜேர்மனியின் பிராங்போர்ட் நகரில் நடாத்தப்பட்டது. அத்தோடு பன்முக ஆளுமைமிக்க வரும் ஆசிரியருமான திரு.கந்தையா அருந்தவராஜா அவர்களின் “ புலம் பெயர்ந்த தமிழர்கள்“ „வலியும் வாழ்வும் “ என்கின்ற நூலும் எம் அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூல் வெளியீட்டிற்காக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த திரு. க. அருந்தவராஜா வருகை தந்திருந்தமை விழாவை சிறப்பித்தது. அதில் துகள் அமைப்பின் சார்பில் நானும் கலந்து கொண்டேன்.
இனி அன்றைய நிகழ்வில் நான் பார்த்ததை ,கேட்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். ஈழம், புகலிடம், என பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் என அன்றைய விழாவில் பரவிக்கிடந்தன.
பார்ப்பதற்குகண்கொள்ளாக்காட்சியாயிருந்து. எங்கும் தமிழாய் , எதிலும் தமிழாய் அறிவுப் பொக்கிஷங்களாய் அமைதியாய் பரவிக்கிடக்க பார்வையாளர்களின் வருகை குறைவாக இருந்தமை மனவருத்தத்தை அளித்தது. பிராங்போர்ட் நகரம் தமிழர்கள் செறிந்து வாழ்வது மட்டுமல்லாமல் எத்தனையோ தமிழ் அமைப்பு உருவாகிய இடம். அந்த அமைப்பினர்கள் எங்கே என்பதைத்தான் ஒருகணம் தேட வைத்தது. ஒரு இனத்தின் அடையாளம் என்பது மொழி, மொழியைத்தக்க வைப்பதன் மூலமே இனம் வாழ்ந்து கொண்டிருக்கும். உலகில் மூத்த இனம் , தொன்மை வாய்ந்த இனம் என்று சொல்கிறோம் எம் இனத்தின் அடையாளங்கள் தொலைந்து போகவிடாமல் நாம் எல்லோரும் சோர்வின்றி உழைக்க வேண்டும். அடுத்த சந்ததிக்கு எதை விட்டுச்செல்லப்போகிறோம்… ? சிந்திப்போம், செயற்படுவோம். அடுத்து நூல் வெளியிட்டீற்கு வருகிறேன். நிகழ்ச்சிகளை அழகாய் ஆரம்பித்து வைத்தார் திரு. இரமேஷ் அவர்கள். அதனைத்தொடர்ந்து வரவேற்புரையை எம் துகள் அமைப்பின் நிறுவனர் திரு. தியான்.ப அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் உரையாற்றியதில் மக்களின் வருகையை மிகக்குறைவாக இருப்பதையும். தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் தமிழர்கள் வராமல் இருப்பது தமிழுக்கே இழுக்காகும் என்பதை வலியோடு வலியுறுத்தி இருந்தார். அடுத்து முனைவர் திருமதி. சுபாஷனி சிறப்புரையை அழுத்தமாக பதிவு செய்தார். எம் தமிழர்கள் வெறுமனயே கவிதை, கட்டுரைகளை, கதைகளை எழுதி வெளியிடுவதையும் தாண்டி இவ்வாறான வரலாற்று விடயங்களை வலிகளை ஆவணமாக வெளிக்கொணர திரு. அருவந்தவராஜா போன்று பலர் முன் வரவேண்டும் என்பதையும். இன்றல்ல, நேற்றல்ல, ஆதிதோட்டு தமிழன் வாழ்ந்திருக்கிறான் என்பதை இந்தச்சான்றுகள் .அதன் வரலாறுகள், வலிகளை இந்தப்புத்தகத்தில் இருப்பதை நான் உணர்கிறேன். அந்த வகையில் அவரின் அரிய முயற்சியென பாராட்டி மகிழ்ந்தார். விழாவுக்குப்முன் அவரோடு உரையாடியதில் இவ்வாறான தேடல் அதற்காக அவர் உழைத்துக்கொண்டிருக்கிறார் என்பதனை அறியமுடிந்தது. எங்கள் துகள் அமைப்பின் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் . அடுத்து எம் அமைப்பின் ஒருவரான திரு. நவீன் அவர்கள் நயவுரையை உணர்ச்சிகரமாக கொடுத்திருந்தார். இவ்வாறான முயற்சிக்கு அவரை வெகுவாக பாராட்டியதோடு இவ்வாறான வரலாற்றுப்பதிவுகள் வலிகளை எங்கள் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக இளையசமுதாயம் வாங்கிப்படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார். வாழ்த்துரைகளை திரு. பொலிகை ஜெயா, இன்னும் பலர் வழங்கியிருந்தனர்.என் வாழ்த்துரையிலும் கூட இவ்வாறான இவரது முயற்சி பாராட்டத்தக்கது எங்கள் வலிகள் எங்கள் வரலாறுகள் அடுத்த சந்ததிகள் அறிய வேண்டும் என அவர் தேடிய தேடலை ஆவணமாக்கி எங்கள்முன் தந்திருக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் படித்து அறியப்படவேண்டிய விடயங்கள் நம் இனம் சிதைந்ததை, புதைந்ததை மீண்டும் தோண்டி எடுத்து நம் வரலாற்றை, வலியை எம்மீது பழி சொல்லும் உலகத்திற்கு உணரும் விதமாய் உணர்த்தியமை பாராட்டிற்குரியது. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் அழித்தொழிக்க அன்றல்ல இன்றும்
அரங்கேறியவண்ணம் இருக்கையில் திரு.அருந்தவராஜா நிதர்சனமாய் நீருப்பித்திருக்கும் இப்பதிவு தமிழினத்தின் வரலாற்றுக்கும் வலிக்கும் சாட்சி.