மொழிகள் – நாகரீகங்களுக்கான பல்கலைக்கழக நூலகமான (Bibliothèque universitaire des langues et clivilisations) பிரான்சின் ‚BULAC‘ நூலகத்தில் தமிழ்நூல்கள் குவிந்து கிடப்பதாக சமூகவலைத்தள பதிவாளர் லக்ஸ்மன் வித்யா குறித்துரைத்துள்ளார்.பல்வேறுபட்ட தனித்துவமான மொழிகள் மற்றும் பல்வேறு தேசிய நாகரீகங்களை அடையாளப்படுத்தும் மிகப் பெரிய நூலகம். பல்கலைக்கழக மட்டத்திலான ஆராட்சிகள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கியதான புத்தகங்களை தன்னகத்தே அடக்கிய பல்கலைக்கழக நூலகமே (la Bibliothèque universitaire ) இதுவென பதிவிட்டுள்ள அவர் குறிப்பில் சில பகுதிகள் :’தமிழர்களாகிய எமக்கு இங்கொரு சிறப்பு உண்டு. அது என்னவெனில் பல்வேறு மொழிகளை உள்ளடக்கிய இந்நூலகத்தில் நம்முடைய செம்மொழியான தமிழ் மொழி நூல்களும் ஏராளாமுள்ளன. கிட்டத்தட்ட நூற்றுக்குமதிகமான மிகச் சிறந்த நூல்கள் இங்குள்ளன. ஃபிரான்சில் இவ்வாறான ஒரு இடத்தில் மிகப் பழமை வாய்ந்த மொழியாகிய தமிழை உள்வாங்கியிருப்பது நூலகத்திற்கும் தமிழர்களாகிய நமக்கும் மிகப் பெரிய பெருமை.“வாராந்த, மாதாந்த சஞ்சிகைகளைப் பார்க்கலாம். குறிப்பாக தமிழ் சஞ்சிகைகளான உயிர்மை, அமுதசுரபி, உயிர் எழுத்து, காலச்சுவடு, கணையழி, மஞ்சரி, புதிய கோடாங்கி, புதுப்புனல், தீராநதி போன்றன பரவிக் கிடக்கின்றன. ஊரில் இருந்தால் எப்படிச் சர்வ சாதரணமாக பக்கத்திலிருக்கும் நூலகத்திற்கு சென்று நாளாந்தச் செய்திகளைப் படிப்போமோ அதைப் போன்றதொரு உணர்வை இங்கு வந்தால் ஏற்படுத்த முடியும்.“’ASIE, 41 Haute-Asie et Asie du sud“ என்ற ஆசியப் பிரிவுக்குள் “41LK Srilanka‘ எ என்ற அடுக்குகளில் தமிழ்ப் புத்தகங்கள் நிறைந்துள்ளன. நூற்றுக் கணக்கான புத்தகங்கள். குறிப்பாக, தமிழ்க்கவியினுடைய ‚ஊழிக்காலம்‘, கே.டானியலின் படைப்புக்கள், கருணாகரனுடைய ‚வேட்டைத் தோப்பு‘, பேராசிரியர் காத்திகேசு சிவத்தம்பி அவர்களின் ‚யாழ்ப்பாணம்‘, ஷோபாசக்தி அவர்களுடைய ‚ம்‘ மற்றும் ‚முப்பது நிறச் சொல்‘, வள்ளிநாயகி எழுதிய ‚யாழ்ப்பாண சமூகத்தின் பெண் கல்வி-ஒரு ஆய்வு‘, தொ.பத்தினாதனுடைய ‚போரின் மறுபக்கம்‘, எஸ்.ஐ.கீதபொண்கலனுடைய ‚இலங்கையில் இனமோதலும் சமாதானமும்‘ மற்றும் ‚மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்கள்‘, கலாபூசனம் செல்லத்துரை எழுதின ‚ இலங்கையின் இனநெருக்கடிக்குத் தீர்வென்ன‘, வண்ணை தெய்வம் எழிதிய ‚யாழ்ப்பாணத்து மண்வாசனை‘, கோபாலரத்தினம் எழிதிய ‚ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை‘, பழநெடுமாறனுடைய ‚பிரபாகரன்‘, சுந்தரலிங்கத்தினுடைய ‚வன்னி‘, அன்ரன் பாலசிங்கம் எழுதிய ‚போரும் சமாதானமும்‘, கமலநாதனுடைய ‚மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்‘, பாவை சந்திரன் எழிதிய ‚ஈழத்தமிழர்களுடைய போராட்ட வரலாறு‘, பா.ஏகலைவனுடைய ‚முள்ளிவாய்க்கால் முடிவல்ல‘, தமிழினியிடைய ‚ஒரு கூர்வாளின் நிழலில்‘, பா.ராகவனுடைய ‚பிரபாகரன் வாழ்வும் மரணமும்‘, டி.ஆர்.காத்திகேயனுடைய ‚ராஜீவ்காந்தி படுகொலை‘.. அப்பப்போ எத்தனை எத்தனை. அத்தனையும் பொக்கிஷம். ‚பாரிஸின் 13 வது வட்டாரத்தில் அதாவது Paris13இல், 65 Rue des Grands Moulins, 75013 paris எனும் முகவரியில் இந்நூலகம் அமைந்திருக்கிறது. மொத்தமாக 15000 சதுர பரப்பளவைக் கொண்ட இதனுள் 910 பிரிவுகளாகத் தளங்கள் பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. 80 மில்லியன் யூரோ மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்நூலகத்தின் செலவினம் ஆண்டுக்கு 2.5 மில்லியன் யூரோக்கள் எனக் கூறப்படுகிறது.வரவேற்பிடத்தில் இணையம் மூலமாக உங்கள் தகவல்களைக் கொடுத்து Réceptionnistes களிடம் நுழைவு அட்டையை (Carte d’entrée) இலவசமாகப் பெற்று உட் செல்ல முடியும். ஃபிரான்ஸின் தேசிய நூலகத்தின் நுழைவு அட்டை இருக்குமாயின் அதையே இங்கும் பயன் படுத்த முடிகிறது.வெளியே வர மனமே இல்லை. குறைந்தது இரண்டு நாட்களாவது இங்கிருந்து இந்தப் புத்தகப் பக்கங்களை பிரட்ட ஆசை. அவசர அவசரமாய்க் கடிகாரம் ஓடிக் கொண்டே இருந்தது. கதவு திறந்தேன். பரிசின் வாகன இரைச்சல் மெல்ல மெல்ல காதில் விழத் தொடங்கியது. திங்கள் முதல் சனி வரை காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையென நீண்ட நேரம் திறந்திருக்கும் இந்நூலகத்திற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று வாருங்கள். உங்கள் நாட்களை பயனுள்ளதாய் மாற்றுங்கள்.