பிரென்சு திரை உலகில் கால்பதித்த ஈழக்கலைஞர்களுக்கு எழுத்தாளர் றஜீவன் வாழ்த்து

 

பிரான்ஸ் வாழ் ஈழக்கலைஞர்கள் பலரும் பிரென்சு திரை உலகில் கால்பதித்து வரும் செய்தியானது தமிழ் சமூக – கலை ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கலைஞர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சமூகவலைத்தள எழுத்தாளர் றஜீவன் ராமலிங்கம் அவர்கள் இக்கலைஞர்கள் தொடர்பில் எழுதிய கருத்து பின்வருமாறு அமைகின்றது :

சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற எமது கலைஞர்களின் விருப்பு சாதாரணமானது அல்ல. அதற்காக அவர்கள் செலுத்தும் விலை, செய்யும் அர்ப்பணிப்புகள் எல்லாமே வியப்புக்குரியவை.

அந்த விடாமுயற்சிக்கு தகுந்த பலன் இப்போது கிடைக்க ஆரம்பித்துள்ளது.

கடந்தவாரம் தான், மன்மதன் பாஸ்கியை கொண்டாடி மகிழ்ந்தோம். அவர் நடித்த பிரெஞ்சுத் திரைப்படம் சிறப்புத் திரையிடலுக்காக வெளியாகியுள்ளது. பாஸ்கியின் விடா முயற்சி, அவரை இந்த உயரத்தில் தூக்கி வைத்துள்ளது.

இங்கே மறுபுறம், ‚வானம்பாடிகள்‘ இசைப்போட்டி நடத்தி எண்ணற்ற கலைஞர்களை வெளிக்கொணர்ந்த தமிழ்ச்செல்வன் அண்ணாவும் பிரெஞ்சு திரைத்துறையில் நுழைந்துவிட்டார். அவர் நடித்துள்ள Le grand bain எனும் பிரெஞ்சுத் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே செல்வன் அண்ணா காணாமல் போயிருந்தார். அவர் எங்கே என்று எல்லோரும் தேடினோம். ஒருமுறை தாடியுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று, அவர் குறித்த பதட்டத்தையும் கேள்வியையும் எழுப்பியிருந்தது. இம்முறை வானம்பாடிகள் போட்டி நடக்குமா? இல்லையா? என்கிற கேள்வியும் விடையின்றி நீண்டது.

எல்லாவற்றுக்கும் அவர் இப்போது பதில் சொல்லிவிட்டார்.

அது இவ்வளவு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஆம்..! அவர் நடிகராகிவிட்டார்.

40 வயதுகளை உடைய எட்டுப் பேர், நீச்சல் தடாகத்தில் அடிக்கடி சந்தித்து நண்பர்களாகி, தங்கள் வாழ்க்கையை எப்படி புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள்? என்கிற ஒற்றை வரிக்கதை, முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது என்கிறது விக்கிபீடியா.

நடிகர்கள் பட்டியலில் தமிழ்ச்செல்வன் அண்ணாவின் பெயரையும் பார்க்கும் போது மகிழ்ச்சியோடு கூடிய பெருமை மனதை நிறைக்கிறது.

இப்போது விடாமுயற்சி மூலம் வெற்றிவாகை சூடியுள்ள எமது கலைஞர்களை வாழ்த்துவோம்.
வாழ்த்துக்கள் தமிழ்ச்செல்வன்.