வாழ்த்து மடல். கடல் சூழ்ந்த தீவில் பார்போற்றும் அன்னையவள் வீற்றிருக்கும் தீவு நயினாதீவு. அந்தக் காப்பியம் போற்றிய மணிபல்லவத் தீவில் வந்துதித்த நாயகனே தமிழ்வேள் நயினை விஜயன் ஐயா..! மண்ணின் மகிமையுடன் தேசம் கடந்தும் இன்றும் உங்கள் சைவத் தமிழ்ப்பணி தொடருதையா. இந் நன்னாளில் உங்களை வாழ்த்தும் இனிய நாழிகையை வழங்கிய அந்த உலகாழும் தாயவள் நயினை நாகபூசனி அன்னையின் பாதங்களை மலர் கொண்டு போற்றுகின்றோம். ************************* நற் கல்விதனை கற்றுயந்து காவல் அதிகாரியாய் நேர்மை கொண்டு பணி செய்தீர் இலங்கை தீவில். பேரின வாத அரசியலால் மூட்டிவிட்ட இன அழிப்பு ஈழத்தை கருவறுத்த காலமதில் (1977,1983), எல்லாள மாமன்னன் தலைநகராய்க் கொண்டு அறம் தவறா ஆட்சி செய்த தமிழ் மண்ணாம் அநுராதபுரம் அங்கு காவல் துறை தகவல் தொடர்பாளராக பணி செய்து கொண்ட போது பேரினவாத தூண்டுதலால் வெறி கொண்ட காடையர் தமிழர் உயிர்களை காவு கொள்ள வந்த போது உடனிருந்தவர் சேர்ந்து எதிர் கொண்டு மறத்தமிழனாய் பல் உயிர் காத்தவர் நீர் ஐயா ..! வாழ்க நீர் பல்லாண்டு ..! *********************** புலம் பெயர்ந்து வந்த போதும் உம் தமிழ்ப் பற்று கொஞ்சம் கூட உம்மை விட்டு இறங்கவில்லை. நற்றமிழ்தனை எடுத்தியம்பும் நல் மனையாள் அமையப் பெற்று வள்ளுவன் இயம்பிய இல்லறத்தில் சிறந்தீர், ‘தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.’ எனும் ஈரடி எடுத்தியம்பிய செல்வங்களை பெற்று , தமிழ்க் கலைதனை வளர்க்கும் இனிய தமிழ்க் கலைக் குடும்பம் பெற்றீர் ஐயா ! வாழ்க நீவீர்..! *******************************************பார் போற்றும் தமிழின் பெருமைதனை ஆபிரிக்க கண்டம் முதல் ஐரோப்பிய கண்டம் கடந்து , ஊர் சேர்ந்து கொண்டு செல்ல முன்னின்று பார் சுற்றும் வாலிபன் ஆகிறீர் ஐயா ! அது மட்டுமா ? டச்சு நாட்டில் சற்றும் அஞ்சாது தமிழ்க் கலைக் கூடம் அமைத்து அந்த நாட்டின் கல்வியியல் அனுமதி பெற்ற கூடம் வைத்த தமிழ் மகனானீர் ஐயா …. ! ******************************************உத்தமனார் உம் பெருமை இன்னும் நீளுதய்யா இருந்தும் இத்துடனே முடித்துக் கொள்கிறேன். சுற்றும் சூழ்ந்து பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி நிற்கின்றோம். பிரான்சு ஈசுவராலயம் நடாத்திய நயினை கரோக்கி இசை மாருதம் நிகழ்வில் (22.10.2017 ) ஜேர்மனியை சேர்ந்த இசைவேள் நயினை விஜயன் அவர்களை வாழ்த்தி வழங்கப்பட்டது. நன்றி.