இலங்கைக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான கர்நாடக இசைப் பாடத்திட்டத்தில் இருக்கும் பாடல்கள் (ஆண்டு 10, க.பொ.த.சா.த, க.பொ.த. உயர்தரம்) ஒலிப்பதிவு செய்யப்பட்டு, நேற்று 28.10.2017 அன்று வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாதனையாளர் மதிப்பளிப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டதுடன் இவ்வொலிப்பதிவில் பங்கு கொண்ட இசையாளர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.
இந்த ஒலிப்பதிவில் ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள், தாட்டு வரிசைகள், அலங்காரங்கள், மேல்ஸ்தாயி வரிசைகள் தவிர 55 வகையான பாடல்கள் அடங்கியுள்ளன.
சங்கீதவித்துவான் பொன்.ஸ்ரீவாமதேவன் (ஓய்வு நிலை இசை ஆசிரியர், வருகை விரிவுரையாளர் – இசைத்துறை) இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி கணேசன், மானிப்பாய் புனித அன்னம்மாள் றோ.க.த.க பாடசாலையின் இசை ஆசிரியர் செல்வி சந்திரிக்கா கணேஸ்பரன், இசைத்துறைத் தலைவர் திருமதி கிருபாசக்தி கருணா, இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் திரு.த.றொபேட், கிளிநொச்சி மாவட்ட ஆசிரிய ஆலோசகர் திரு.அ.கிருஸ்ணானந்தன் ஆகியோர் இவ்வொலிப்பதிவில் குரலிசையாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
இலங்கை முழுவதிலும் இருக்கும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு இந்த ஒலிப்பதிவு வழங்கப்படவுள்ளதாகவும் இலங்கைக் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் இவ்விழாவில் தெரிவிக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரியதாகும்.
இந்த ஒலிப்பதிவிற்காக எனது ஒலிப்பதிவுக் கலையகத்தில் 150 மணித்தியாலங்களைக் கடந்து பணியாற்ற வேண்டி இருந்தது.
மாணவர்கள் இந்த ஒலிப்பதிவால் நற்பயனை அடைய அனைத்துக் கலைஞர்கள் சார்பிலும் வாழ்த்துகிறேன்.