ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை:
“சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும் தீண்டினும், பிணப் புகை படினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது அவசியம்.“
ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை:
“திருநீறு பூசும் நேரம், எளிய சாதிகள் குறுக்கே வரக் கூடாது.“
ஆறுமுகநாவலரின் பிரச்சாரங்கள், படிநிலையில் கீழுள்ள மக்களை முற்றாக புறம் தள்ளி ஆதிக்க சாதியினருக்கு அடிமையாயிருக்கும் நிலையை நவீன சைவ சனாதன முறையூடாக நியாயப்படுத்தின.
இப்போது யாழ்ப்பாணக் கோவில்கள் வெள்ளாளர்கள் வசம் இருப்பதுபோல் இல்லாமல், அந்தக் காலத்தில் கோவில்கள் எல்லாச் சாதிக்கும் பொதுவானதாக இருந்தன. நல்லூர் கந்தசாமி கோவில் செங்குந்த சாதியினரிடமும், செல்வசந்நிதி முருகன் கோவில் பரதவ குலத்தினரின் கையிலும் இருந்தன. இதுபோன்ற நூற்றுக்கணக்கான ஆதாரங்களை உங்களால் காட்ட முடியும். இந்தியாவில் இருந்து பிராமணர்களை இறக்குமதி செய்து அவர்களுக்கு குஞ்சம் கட்டிக் கோவிலில் முதல் ஸ்தானத்தை வழங்கிவிட்டு; இரண்டாவது ஸ்தானத்தை தனது வெள்ளாள சாதிக்கு உருவாக்கி கொடுத்தார் நாவலர்.
சிறு தெய்வங்கள் அன்றைய யாழ்ப்பாணத்தில் பரவிக் கிடந்தன. சிறுதெய்வக் கோவில்களில் எல்லாச் சாதியினரும் பூசை செய்தனர். சிறு தெய்வக் கோவில்களில் வெள்ளாள மேலாதிக்கம் இருக்கவில்லை. சிறுதெய்வ வழிபாட்டை, சைவத்துக்கு எதிரானது எனப் பழித்து, அதை இல்லாமல் செய்ததன் மூலமாக வெள்ளாளரின் மேலாதிக்கத்தை கோவில்களை மையமாகக் கொண்டு உறுதிசெய்யதார் ஆறுமுக நாவலர்.
மனுதர்மத்தை வெட்டி ஒட்டி கொஞ்சம் டிங்கரிங் செய்து, சூத்திரர்களான வெள்ளாளர்களை உயர்ந்தவர்களாக நிறுவியதுதான் ஆறுமுக நாவலர் செய்த பெரிய சாதிக் கடமையாகும்.
„சாதி வேறுபாடு கூடாது. எல்லோரும் இறைவனின் குழந்தைகள்“ என்று சொன்ன வள்ளலாருடன் கொடுக்குக் கட்டிக் கொண்டு சொற்போர் செய்தார் நாவலர்.
– அமுதநதி சுதர்சன்