அவர்கள் இவளைப் பார்த்து ஏதோ பேசுவது போலவும் இருந்தது. மதுமதி சற்று வேகமாக நடந்தாள். வேட்டைக்கார்ர்களின் சிரிப்பொலி மரங்களினூடு மோதி எங்கும் அதிர வைக்கும் அளவுக்கு சத்தமாக இருந்தது.. வேட்டைநாயும் சத்தமாக குரைத்தது.. அவர்களும் மதுமதியோடு சேர்ந்து நடந்தார்கள் . அவர்களில் ஒருவன் „ஹாய் எங்கே போறாய்?“ என்றான் . மதுமதி மனதை திடப்படுத்தி பயத்தை வெளிக்காட்டாது புன்முறுவலுடன் “ வெளிக்காற்றை சுவாசிப்பதற்கும் இயற்கையை ரசிப்பதற்குமான ஒரு நடை“ என்றாள். “ ஆம் நல்லதே“ என பதிலளித்து விட்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தவர்கள் அதில் வந்த குறுக்குப்பாதையில் நின்றனர். நாங்கள் இந்தவழி போகிறோம்“ எம்மோடு வாறியா“ என்றனர். “ இல்லை. நான் என் அண்ணனுக்கு காத்திருக்கேன்“ என ஒரு பொய்யை சொன்னாள். “ ஓகே ஓகே“ என்றபடி அவர்கள் அந்த குறுக்குவழியே அவளுக்கு கையசைத்துவிட்டு தொடர்ந்தார்கள். „அப்பாடா “ என்ற ஒரு பெருமூச்சுடன் மதுமதி அந்த மரத்தின் கீழ் இருந்த பெரும் பாறாங்கல்லின் மேல் இளைப்பாறினாள். இந்த வேட்டைக்கார்ர்களை பார்த்தவுடன்அவர்களின் தோற்றத்தைக்கண்டு அவர்களை மோசமானவர்கள் என அவள் மனம் எடை போட்டதை நினைத்து சிரித்துக்கொண்டாள்.. தோற்றத்தை வைத்து எவரையும் எடை போடக்கூடாது என்ற ஒரு உண்மையையும் தெரிந்து கொண்டாள்.
சங்கர் பல தடவை அவள் தொலைபேசிக்கு „எங்கே மது நீ „என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அதற்கு அவளின் மனம் பதிலளிக்க ஒத்துக்கொள்ளவில்லை. “ நான் எங்காவது போறன்..செத்தே தொலையுறன்..இந்த பிரச்சனைக்கு இது ஒன்றே தீர்வு“ இதற்கு மேல் கண்ணீரைத்தவிர வேறு எதையும் அறியாதவளாய் நின்றாள் அந்தப்பேதை.
வானம் சற்றென இருண்டது. பக்கத்தில் விழுந்ததுபோல இருந்த பெரும்இடி அவளின் காதை செவிடாக்கியது.. மழை பொழிந்தது. வானத்தில் ஹெலிக்கொப்டர் ஒன்று தாழப்பறந்தது. இந்த ஹெலிக்கொப்டரை பார்த்தவுடன் நினைவுகள் அவளை தாயகத்திற்கு அழைத்துச்சென்றது. இப்படித்தான் ஒரு மழைநாள் விளையாடிந்திரிந்தபள்ளிப்பருவம். வாழ்க்கையின் கஸ்ரம் என்பதே அறியாத பருவம். மண்ணிலே கால் பட்டால் அழுக்காகி விடும் என அழகு பார்த்து செருப்போடும், கால் விரல்களுக்கு அழகாக நகப்பூச்சும் இட்டு ம் ஒரு ரம்பியமான உலகில் சஞ்சரித்த காலமது..அன்றொருநாள் வானத்தில் சஞ்சரித்த ஹெலிக்கொப்டர் சராமாரியாக நகரை நோக்கி சுட்டுக்கொண்டிருந்தது. எல்லோரும் அல்லோலகல்லோலப்பட்டு ஓடிக்கொண்டிருந்தனர். இது வழமையான ஒரு சம்பவமாகவே அங்கு நிகழ்ந்தது. ஹெலிக்கொப்டர் மறைய வானத்தில் கழுகுபோல பயங்கர இரைச்சலுடன் வந்த விமானம் உயரவும், தாழவும் பறந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. பயத்தினால் மக்கள் மரங்களின் கீழும், பதுங்குகுழிகளுக்குள்ளும் ஒளிந்துகொண்டனர். வீட்டிற்கு வீடு பாதுகாப்பிற்கு பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தன. மதுமதியின் தந்தை சௌகரியமான பதுங்குகுழி ஒன்றை பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் அமைத்திருந்தார். சிறிய வீடுபோன்றே உள்ளே சீமெந்து பூசி அழகாக செய்திருந்தார்.. போர்க்கால சூழலுக்கு ஏற்றாற்போல உழுந்துமாவு திரித்து சாப்பிட தயாராக பெரிய டப்பாவில் அடைத்து வைப்பது அம்மாவின் வழக்கமாகவும் இருந்தது. பிள்ளைகள் போர்ச்சூழலில் கூட பட்டினி என்பது அறியாமல் இருக்க வேண்டும் என்பது அம்மாவின் எண்ணமாகவும் இருந்தது. அந்த நாள் அவளின் வாழ்வில் மறக்க முடியாதநாள். போர்ச்சூழலோடு வாழ்க்கை பயத்தோடும் பீதியோடும் நகர்ந்த காலம்..
அப்போதுதான் குளியலறையில் இருந்து வெளியில் வந்திருந்தாள் மதுமதி. சவுக்காரத்தின் வாசனை தூக்கலாக,ஈரக்கூந்தலை துவட்டியபடி பிடித்தமான பாட்டை வாய் முணுமுணுக்க வந்தவளை நோக்கி, அம்மா கத்தினாள்““ மது ஓடி பங்கருக்குள்ளே வா… குண்டு போடப்போறாங்கள்.. பயம் இல்லாமல் நிற்கிறாய்… வா“ என்ற கூச்சல் போட்டதை கூட பொருட்படுத்தாது நின்றவளை அங்கே ஓடி வந்த பக்கத்து வீட்டுத்தம்பி ஒரு ஒரு தள்ளு தள்ளி விட்டு தானும் குப்புறப்படுத்துக்கொண்டான். இவர்கள் நின்ற இடத்தில் இருந்து நாலாவது வீட்டில் விழுந்த குண்டின் துகளொன்று இவளை கடந்து சென்றது. அன்று அவள் நிலத்தில் தள்ளப்படாவிட்டால் அன்றே அவள் தலை துண்டாடப் பட்டிருக்கும். பதுங்குகுழியைவிட்டு வெளியே வந்த அம்மா திட்டிய வார்த்தைகள் இன்றும் இப்ப நடந்தது போல பல வருடங்கள் தாண்டிய போதும் அவள் காதில் ஒலித்த வண்ணம் இருக்கிறதென்றால் அந்த சந்தர்ப்பத்தின் தாக்கத்தின் பிரதிபலிப்பே அது. அந்த சந்தர்ப்பத்தில் கூட சேற்று நிலத்தில்படுத்தால் அசிங்கம் என்பதைத்தவிர தன் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் எண்ணம் துளியளவு கூட அவளுக்கு இல்லாது இருந்தது அவளின் முட்டாள்த்தனம். அதேபோல் இன்று காதலன் ஒரு வாரம் பேசாது இருந்தமைக்காக அவனிடம் காதலே இல்லை என முடிவு செய்து , அவனை மறக்க முயன்று இன்னொருவனுக்கு கழுத்தை நீட்ட முடிவெடுத்தது, அதைவிட பெரிய முட்டாள்த்தனம்.. „“ ஏய் மது நீ என்ன முட்டாள்ப்பெண்ணா?? சிந்தித்து முடிவு எடுக்க மாட்டாயா? “ மனட்சாட்சி கோபத்தோடு கேட்டது. கொட்டும் மழையில் உடல் தெப்பமாக நனைந்ததால் நடு நடுங்கியது. தொலைபேசி தன் செயல் இழந்து தூங்கியது. அந்த பாறாங்கல்லின் மேல் சித்திரப்பாவை ஒன்று இருப்பதுபோல் அமர்ந்திருந்தாள் மதுமதி.
அந்த நேரம் பலத்த பிரேக் சத்தத்துடன் நிற்பாட்டிய காரை நோக்கினாள். சங்கர் காரை விட்டு இறங்கி வந்து கொண்டிருந்தான். அவனைப்பார்த்ததும்அவளின் மனம் திக் என்றது. அவன் மௌனமாகவே வந்தான். தனது ஜாக்கட்டை கலட்டி அவளுக்கு கொடுத்தான். அவனைத்தொடர்ந்து மதுமதி காரில் ஏறினாள். „அவன் என்னை திட்டி இருந்தால் கூட பரவாயில்லையே .. மௌனத்தால் எனை கொல்கிறானே“ என நினைத்தாள். கோபத்தை சிலர் வார்த்தைகளால் வெளிப்படுத்தாது மௌனமாக இருப்பது மரணவலிக்கு ஒப்பானதே. அதை மதுமதி அந்தக்கணங்களில் உணர்ந்தாள். தன் நிலைப்பாட்டை சங்கருக்கு சொல்ல வேண்டும். முதலில் தான் துணிய வேண்டும். தீர்மானித்துக்கொண்டாள். „விதி வழியல்ல வாழ்க்கை மதி வழி செல்லு“ மனட்சாட்சியும் ஒத்துக்கொண்டது.
( தொடரும்)
ரதி மோகன்