யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையுடன் இணைந்து சேவையாற்றும் டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை வருடாந்தம் நடத்தும் வள்ளுவர் விழா, திருக்குறள் போட்டிகள் 2019.11.16ந் திகதி மிகச்சிறப்பாக நடந்தன. விழா டோட்முண்ட் நகரத்தின் மத்தியிலுள்ள (Münsterstraße) முன்ஸ்ரர் வீதி 122ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள Helmholz Gymnasium என்ற பாடசாலை மண்டபத்தில் காலை 10.30 மணி தொடக்கம் மாலை 18.15 மணிவரை மிகவும் சிறப்பாகவும், அமைதியாகவும் நடந்தேறின.
நிகழ்வுகளை இராமநாதன் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் திருமதி.சுபத்திராதேவி விவேகானந்தன் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து தமிழ்மொழி, தமிழின வளர்ச்சிக்காகத் தொண்டாற்றிய, பணிபுரிந்த, சேவையாற்றிய, போராடிய போராளிகள் ஆகிய அனைத்து நல்லுள்ளங்களின் நினைவாகவும், உலகில் அமைதியும்,, சமாதானமும் வேண்டி ஒரு நிமிடநேர மௌனவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பான ஒழுங்கமைப்பு முறையில் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வுகளை மூத்த அறிவிப்பாளர் திரு.முல்லைமோகன் முதலில் அறிவிப்பினை ஏற்று ஆரம்பித்து வைக்க, யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் இளம் உறுப்பினர்கள் செல்வி.ஆரணி கனகசுந்தரம், செல்வி.அபிராமி மகேந்திரன், திருமதி.ஆரபி ராகவன் சிறிஜீவகன் ஆகியோர் தொடர்ந்து தொகுத்து வழங்கினர்.
முதலில் தமிழ் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ் வாழ்த்தினை வள்ளுவர் தமிழ்ப் பாடசாலையின் கலைவகுப்பு மாணவிகள் செல்வி.தமிழினி பரமேஸ்வரன், செல்வி.சுப்ரஜா திருச்செந்தூரநாதன் ஆகியோர் இசைத்தனர். பாடசாலைக் கீதத்தினை வள்ளுவர் தமிழ்ப் பாடசாலையின் சங்கீத ஆசிரியை திருமதி.ஞானாம்பாள் விஜயகுமார் இசைத்தார்.
தொடர்ந்து வரவேற்புரையினைத் திருமதி.ஆரபி ராகவன் சிறிஜீவகன் வழங்கினார். அவர் தனது உரையில், வந்துள்ள போட்டியாளர்கள், பெற்றோர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள், இம்முறை வந்த சிறப்பு விருந்தினர்கள் யாவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
தலைமையுரையினை யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் உபதலைவி, ஒபகவுசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் ஆசிரியை திருமதி.கலாவதிதேவி மகேந்திரன் வழங்கினார். அவர் தனது தலைமையுரையில் திருக்குறள் போட்டி வருடாந்தம் நடைபெறுவது பற்றியும், திருக்குறள் உலகமக்களின் வாழ்விற்கு வழிகாட்டியாக இருப்பது பற்றியும் எடுத்துக்கூறினார். இன்று உலகில் ஏற்பட்டுள்ள பல்வேறு வகையான பிணிகளைப் போக்குவதற்கு பெரும் சிரமப்படுவதைக் கூறி, உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு மருந்து என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியிருப்பதை எடுத்துக்கூறினார்.
திருக்குறள் போட்டிகள் நிகழ்வு பற்றிய விபரம், நடுவர்கள் அறிமுகம், போட்டி விதிமுறைகள் என்பனவற்றை, யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் தலைவர், வள்ளுவர் தமிழ்ப் பாடசாலையின் ஆசிரியர் திரு.பொ.சிறிஜீவகன் விளக்கமாக எடுத்துரைத்தார். முதலில் நடுவர்களாக செயற்படுபவர்களை அறிமுகம் செய்தார். பதினாறு நடுவர்களின் பெயர்களையும் ஒவ்வொருவராகக் கூறி, அவர்கள் பற்றிய பல்வேறு விடயங்களை விளக்கமாக எடுத்துக் கூறினார். நடுவர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து போட்டியில் பங்குபற்றும் ஒழுங்குகளையும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் எடுத்துவிளக்கினார்.
சிறப்புரைகள் வரிசையில் முதலில் இலங்கையிலிருந்து வருகைதந்த, யாழ். சுண்டிக்குளி மகளீர் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி செல்வி. சர்விகா அண்ணாமலை உரையாற்றினார். அவர் தனது உரையில் இன்று இந்நிகழ்வில் கலந்துகொள்வதில் பெருமைகொள்கின்றேன். நான் சிறப்புரையை இங்குதான் முதலாவதாக ஆற்றுகின்றேன். தாய்நாட்டில் பல போட்டி நிகழ்வுகளில் பேசியுள்ளேன். தாய்நாட்டில் பார்ப்பதற்கும், இங்கு வேற்று நாட்டில், வேற்று மொழியில் பயிலும் தமிழ்ப்பிள்ளைகளின் இந்நிகழ்வுகளை பார்ப்பதற்கும் நான் பெருமகிழ்வுகொண்டு பெரும் வியப்பில் ஆழ்ந்து கொண்டிருக்கிறேன். மிகச்சிறப்பாகச் சிறுபிள்ளைகள், மாணவர்கள் திருக்குறளை மனனம் செய்து கூறிக்கொண்டிருப்பது போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியதாகும். தமிழர்கள் திருக்குறளைப் பெற்றவகையில்; பெருமைகொள்ளல் வேண்டும். புழகாங்கிதம் அடைதல் வேண்டும். திருக்குறளில் 1330 குறள்கள். இவற்றில் உள்ள ஈரடிகள் மூலம், உலகத்தின் தத்துவங்கள் எல்லாவற்றையும் அடக்கிய பெருமை உள்ளது. காலங்கடந்தும் புதிய கருத்துக்களை காணக்கூடியதாக இருக்கின்றது. நாங்கள் அறநெறியில் அன்பு செலுத்தி மண்ணில் நல்ல வண்ணம் வாழவழி காட்டி இருக்கின்றது. எங்கள் உள்ளங்களை, எண்ணங்களை உயர்வாக வைத்து வாழுதல் வேண்டும். மனம் போனபடி வாழ முற்படாது, நீதியாகவும், அறமாகவும் வாழ வேண்டும் என தனது கருத்துக்களைக் கூறினார்.
மருதனாமடம் இராமநாதன் கல்லூரி முன்னைநாள் அதிபர் திருமதி.சுபத்திராதேவி விவேகானந்தன் சிறப்புரை ஆற்றினார். இங்கு இந்த நிகழ்வில் பங்குபற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எமது ஊரில் நடக்கின்ற விழாவில் இருப்பது போன்ற உணர்வைப் பெற்றுக்கொள்கின்றேன். இனத்தால், மதத்தால், மொழியால் முற்றிலும் வேறுபட்ட சமூகச் சூழலில் எமது குழந்தைகள் வாழ்கின்றார்கள். அவர்களுக்கு எமது தாய்மொழியை, தமிழர் பண்பாட்டுக் கலாசாரங்களை அறிவதற்கு ஏற்ற வகையில் செயலாற்றி, தமிழர் விழுமியங்களைத் தெரிந்து, சிறந்த தமிழ்ப் பிரசையாக வாழ வழிகாட்டும் நலன் விரும்பிகள், பெரியோர்கள், ஆசிரியர்கள் யாவரையும் வாழ்த்துகின்றேன். இப்பணிக்குச் சேவையாற்றும் தமிழ்ப்பாடசாலைகளை வாழ்த்திப் பாராட்டுகின்றேன். பாடசாலைகளுக்கு முன்நின்று ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து அல்லும்பகலும் பாடுபடும் யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை அமைப்பையும், அதன் குழுவினர்களையும் பாராட்டுகின்றேன் என வாழ்த்தியதோடு, திருக்குறளின் பல்வேறு அதிகாரத்தின் குறள்களையும் எடுத்துக்கூறி வாழ்வு நெறிகளை விளக்கிக் கூறினார்.
சங்கீத ஆசிரியர்கள் திருமதி.ஞானாம்பாள் விஜயகுமார், திருமதி.வத்சலா கனகசுந்தரம், திருமதி.விஜயகலா கிருபாகரன் ஆகியோர் திருக்குறள்களின் சில குறட்பாக்களுக்கு இசையமைத்து தங்கள்தங்கள் மாணவர்களை பாடவைத்தமை சிறப்பாகவும், சபையோரை மகிழ்ச்சியடையவும் வைத்தன.
நடன ஆசிரியை திருமதி.கலைநிதி சபேசன் திருக்குறளின் உழவு என்ற அதிகாரத்தின் குறட்பாடல்களுக்கு, தனது மாணவர்களை நடனமாட செய்தமை சபையோரை மிகவும் ஆனந்தமடையச் செய்தன.
எஸ்.ரீ.எஸ் ஸ்ரூடியோ இயக்குநர் திரு.எஸ்.தேவராசா வள்ளுவர் தமிழ்ப் பாடசாலையின் ஒன்றுபட்ட செயற்பாட்டை வாழ்த்திப் பாராட்டினார். சிறுவர்களுக்கான தமிழ் வளர்ப்புப் பணியில் செயற்பட்டு, நீண்டபல ஆண்டுகளாக திருக்குறள் போட்டிகளை முன்னெடுத்து வருகின்றமையையும், செயற்படுகின்ற அனைவரையும் வாழ்த்துவதாகக் கூறினார்.
ஐரோப்பிய வானொலி இயக்குநர் திரு.த.இரவீந்திரன் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை தொடர்ந்து செய்துவரும் திருக்குறள் போட்டி பற்றி எடுத்துக்கூறியதுடன், யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை வள்ளுவரை நிலைநிறுத்திச் செயற்படுவதையும் குறிப்பிட்டு, இளம்பிள்ளைகளையே அறிவிப்புத்துறையிலும் வளர்த்து வருவதை கூறி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்தோர் பன்னாட்டு எழுத்தாளர் ஒன்றியத்தின் உபதலைவர் திரு.வி.சபேசன் பொதுவான முறையில் திருவள்ளுவர் எப்படித் திருக்குறள்களில் கருத்துக்களைக் கூறியுள்ளார் என்று பல அதிகாரங்களில் உள்ள குறட்பாக்களை எடுத்து விளக்கமாக கூறியதுடன், இன்று வள்ளுவரை சமயவாதிகள் பல கட்டுக்கதைகளைக் கூறி குழப்பங்களை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென தன் கருத்துக்களையும் கூறினார்.
தொடர்ந்து தாயக மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கையில் திரு.க.கனகசுந்தரம், திரு.அ.புவனேந்திரன் ஆகியோர் ஈடுபட்டு, சேர்த்த 265,28 ஒயிரோ நிதியினை கல்விச் சேவையின் பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனர்.
நிறைவாக நடுவர்களின் கணிப்பீடுகளின்படி கூடிய புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களையும், ஏனைய பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் பதக்கங்களையும் ஒழுங்குமுறையில் பாடசாலை ஆசிரியை திருமதி.கிளி சிறீஜீவன் எடுத்துக்கொடுக்க நடுவர்கள் முன்னிலையில் தொழிலதிபர் திரு.சோ.தங்கராசா அணிவித்துக் கொடுத்தார். இந்நிகழ்வு நன்றியுரையுடன் இனிதே நிறைவெய்தியது.