அம்மா இந்த நாட்கள்
எம்முடனேயே முடியட்டும்
இனி எவரும்
இப்படி வாழவேண்டாம்
இவ்வாறு சாகவேண்டாம்
நான் பட்ட துன்பம்
நீ பட்ட சிரமத்தை
நினைக்கவே கூடாது!
இத் துன்பங்கள்
யாரையும் நெருங்கவும் கூடாது
நெருங்க விடவும் கூடாது
மண்தின்று வளரும்
மரமாக மாறிவிட்டோம்
இல்லை மாற்றிவிட்டார்
நஞ்சற்ற கொடி எல்லாம் உணவு
கசப்பான உணவு கூட அமுது
மலம் கலக்கா நீரெல்லாம் குடிநீர்
மொத்தத்தில்
காட்டு மரம் கூட கண்டு அஞ்சும்
காட்டு வாசியாக்கி விட்டார்கள்
இல்லை என்னும்
ஒன்றுக்குள் நாம்
வாழ்ந்து கொண்டுள்ளோம்
எதுவும் இங்கில்லை
பணம் இல்லை
பொருள் இல்லை
மருந்தில்லை
உணவில்லை
நின்மதி துளிக்கும் இல்லை
தூங்கவும் இடவில்லை
ஒன்று மட்டும் உள்ளது
சுற்றவும் சாவும்
அழுகையும் அவலமும்
எம் இறப்பில் எழுதப்படட்டும்
நாம் எப்படி இறந்தோம் என்று
ஆக்கம் கவிஞை பாமினி சத்தியமூர்த்தி