கரும் பாறையையும்
கரை நோக்கி நகர்த்திவிடுகின்றதே
தினம் தீண்டிடும் அலையது…
எதையோ நோக்கிய பயணமிது
எளிதில் இதை எவரும் புரிந்திடார்…
நேர்வழி நடந்திடின்
நொடியும் உறங்கிவிட முடியாதே
ஒரு வழிப் பாதையுமல்ல
ஒதுங்கி நின்றால் நாளை உனக்கான
மாற்று வழியும் உருவாகிவிடாதே…
தேற்றிட வருவார் எவருமில்லை
தேடிப் பெறும் உறவு நிலைப்பதுமில்லை
காற்றிலாடிடும் காவோலை
கனதியான செய்தி சொல்லிடுமே
ஆனாலும் அதை கவனிப்பார் எவருமில்லை…
ஊற்றெடுத்து பாயும் நதி
நொடிப்பொழுதும் தயங்குவதில்லை
ஓரிடமும் தங்கிடுவதுமில்லை..
காற்றடித்திடும் திசையில்
காரியவாதிகள் நடந்திடுவர்
போற்றி துதிபாடும்
கண்கெட்ட உலகமிது…
வேரறியாத மரங்களின்
வாழ்நாட்கள் நீள்வதில்லையே
போர் கொள்ளாத
மேகங்கள் மழையாவதுமில்லையே..
துளை தாங்கியதால்
இசையை பிரசவிக்கும் மூங்கில்கள்
வலி கண்டு கொண்டாலும்
வழிப் பயணத்தை நிறுத்திவிடாதே..
விழி மூடி உறங்காதவரை
உன் வெற்றியை
யாரும் திருடிட முடிவதில்லையே….!!
அ.பவளம் பகீர்.