எனது நினைவுகள் மீண்டும் TRTவானொலிப் பக்கம் திரும்புகின்றன. தமிழ்ப்பிரியா இளங்கோவன் என்ற பெயரை நான் முதன் முதலாய் கேட்டதும், இந்த ஆளுமை பற்றி அறிந்ததும் அங்கேதான். எனது நிகழ்ச்சிகளில் பங்கு பற்றாத போதிலும்; பிரத்தியேகத் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொண்டு பல தடவைகள் உரையாடியுள்ளார்.
அறிவிப்புத் துறையில் வளர் நிலையில் இருந்த எனக்கு; ஒரு அறிவிப்பாளர் எப்படியெல்லாம் நிகழ்ச்சிகளில் உரையாட வேண்டும். எதையெல்லாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இவர் ஒரு மூத்த எழுத்தாளர் என்பதை A.S.ராஜா அவர்கள் மூலம்தான் அறிந்து கொண்டேன்.
நிகழ்ச்சிகளின் போது ஏதாவது தவறுகள் நேர்ந்தால் இருவருக்கு மட்டும்தான் நான் பயப்படுவேன். ஒருவர் தமிழ்ப்பிரியா இளங்கோவன். இன்னொருவர் பாரதி (ஜேர்மன்). இவர்கள் இருவர் மீதும் நான் இன்றுவரை பயம் கலந்த மரியாதை வைத்திருக்கின்றேன்.
நான் வானொலியில் பணியாற்றிய காலங்களில் தமிழ்ப்பிரியா இளங்கோவன் அவர்கள் எழுதிய பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். IBC தமிழ் வானொலியில் S.K.ராஜன் அவர்களின் நிகழ்ச்சியில் சுவிஸில் இருந்து திரு.திருமதி நிர்மலா அலெக்சாண்டர் ஆகியோரின் இனிமையான குரல்களில் அழகு வரிகள் ஒலிக்கும். அதே காலப்பகுதியில் TTN தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் இவர் பங்கு பற்றிச் சிறப்பித்து வந்தார் என்பதை அறிந்தேனே தவிர, முகம் பார்க்க முடியவில்லை.
சில வருடங்களின் பின்பு மேதகு தேசியத் தலைவர் அவர்களின் பிறந்தநாளுக்காக இணைய தளத்திற்கு ஒரு கவிதையை ஒளிப்பதிவு செய்த போதுதான் இவரை நேரில் பார்த்துப் பேச முடிந்தது. கலைஞர் காவலர் வண்ணை தெய்வம் அவர்கள்தான் அந்தச் சந்தோஷத்தை எனக்கு வழங்கியிருந்தார்.
அதன் பின்புதான் இவர் பல தளங்களில் இயங்கி வந்ததையும், இவருடைய படைப்புகளின் வீச்சையும் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. கவிதைகளைச் சிறப்பாக எழுதத் தெரிந்த போதிலும், சிறு கதைகளை ஆழத் தெரிந்தவர். சமுதாய அக்கறை கொண்ட உயிரோட்டமான கதைகளைப் படித்தால், ஒவ்வொரு கதையும் எமக்குச் சொந்தமானதாகிவிடும். சில வருடங்களின் முன்பு ஒரே மேடையில் „காம்பு ஒடிந்த மலர்கள், ஒரு நியாயம் விழிக்கின்றது“ என்னும் இரண்டு சிறுகதை நூல்களை வெளியிட்ட பெருமையும் இவருக்கு உண்டு. ஈழத்துப் படைப்பாளர்களின் பார்வையில் படுகின்ற முன் வரிசைப் பெண் எழுத்தாளர்களில் இவரும் ஒருவராவர்.
இணையத் தளத்திற்கான நேர்காணல் ஒன்றிற்காக இவரை ஒரு நாள் தொடர்பு கொண்டிருந்தேன். உடனே சம்மதித்தவர், யார் என்னை நேர் காணல் செய்யப் போகின்றார் என்று கேட்டார்? மரியனிற் என்று கூறினேன். என்னை நேர்காணல் செய்பவருக்கு என்னைப்பற்றியும், எனது படைப்புகள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார். கேள்விகளை நான் தயாரித்துக் கொடுக்கின்றேன், அவர் கேட்பார் என்று நான் கூறினேன். அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டு, இரண்டு நூல்களை மரியனிற் அவர்களுக்கு வாசிக்கக் கொடுத்த பின்புதான் நேர்காணலுக்குச் சம்மதித்தார்.
இந்த மூத்த எழுத்தாளர் எனது நெஞ்சுக்கு நெருக்கமாகியதில் இருந்து, கவிதையோ, கதையோ தேவை என்ற போது மட்டுமல்லாமல்; மனம் கனக்கின்ற போதெல்லாம் நான் நினைக்கின்ற, கதைக்கின்ற பாசம் நிறைந்த ஒரு தாயாகிவிட்டார்.
நான் அதிகமாக நம்பி வாய் திறப்பது இவர் செவிகளுக்கு அருகில்தான். என்னைக் கடைக் கண்ணால் பார்த்தபடி இருக்கும் ஆதிபராசக்தி. சில வருடங்கள் பிறர் சூழ்ச்சிகள் தந்த வேதனைகளால் நான் மனம் சோர்வடைந்து, சோகப் பெரு நெருப்பில் கருகிய போதெல்லாம்; அன்பைத் தெளித்து என்னை உயிர்ப்பித்தார். தொலை பேசி அழைப்பை ஏற்படுத்தி அக்கா என்றவுடன் அன்னையின் கரிசனையோடு உரையாடுவார்.
என் மனக் கவலைகளை அக்கறையுடன் கழைந்து கொள்வதுபோல்; கோபத்தையும் தணித்து என்னைத் தேற்றுவார். நான் பொறுமை இழக்கின்ற போதெல்லாம் மௌனம்… மௌனம் என்று கூறுவார். அந்த மௌனத்தின் சக்தியை இப்போதுதான் நான் உணர்கின்றேன்.
எனது படைப்புகள் ஒவ்வொன்றும் வெளிவந்தவுடன் இவரிடம் இருந்து தொலை பேசியழைப்புகள் வருகின்ற போதெல்லாம், எனது இருதயம் இருமடங்காகத் துடிக்க ஆரம்பித்துவிடும். மகிழ்ச்சியால் அல்ல, அச்சத்தால். முதலில் அந்தப் படைப்புகள் பற்றிய குறைகளைக் கூறிய பின்புதான், மறு பக்கத்தைப் பேச ஆரம்பிப்பார். புகழ்ச்சிகள் போலவே கண்டிப்புகளும் எனக்குக் கிடைக்கும். என்னைச் செதுக்குகின்ற சிற்பி என்பதால், எல்லாவற்றையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வேன். எனது படைப்புகள் பலவற்றுக்கு „உணர்வுகள், வழிகாட்டிகள், மண் தந்த மாற்றம், இவன் ஒரு…, பார்வையின் தரிஷனம்“ என்று பெயர்களையும் சூட்டியுள்ளார்.
நான் இதுவரை காலமும் ஒரு வளர் நிலைக் கலைஞனாகச் சம்பாதித்தது இவர்களைப் போன்ற அன்பான ஆளுமைகளைத்தான். தமிழ்ப்பிரியா இளங்கோவன் அவர்கள் ஆன்மீகப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருவதால் எழுதுகோல் மௌனமாகி விட்டது. மௌனம் கலைந்து மறுபடியும் பல சிறுகதைகள் வீரியத்தோடு விரிய வேண்டும் என்பது எனக்குள்ளே உள்ள பெருந்தாகம்!
-பிரியமுடன்
கி.தீபன்