சில வினாடிகளே எனினும்
சில மனிதர்களை அடையாளம் காட்டியது
நொடிகளுக்கான பூகம்பம் எனினும்
கால்களை நடுங்க வைத்து…
நடு முதுகில் இரண்டு தட்டு தட்டி
அறையினை உலுக்கி விட்டு
அலங்காரப் பொருட்களை
கிணுகிணுக்க வைத்து மறைந்து விட்டது ..
சில நொடிகள் எனினும்
தடதடத்த இதய ஒலி பலமாய் கேட்டது
சில்லறையாய் குவிந்தனர் மனிதர்கள்
வெளியே அடுக்கு மனைகளை விட்டு..
வேலையற்றவன் பொய் வதந்திகள்
முகநூல், கீச்சியத்தில்…
பொழுது போகாதவர்கள் ஜோக்குகள்
ஒலிப் பதிவுகளில்…
பாதுகாப்பான இடமென்று
வெற்று நிலங்களில் அடைக்கலம்
வீட்டை விட்டே வெளியேறாத
படிப்பே இல்லா சிநேகிதி கேட்டாள்,
வரப் போவது பூகம்பம் என்றால்
கட்டிடத்தை மட்டுமா தகர்க்கும்
பாதுகாப்பென்று நாம் தஞ்சமடைந்த
அந்த நிலம் பிளவுபடாதா? என்று..
தமிழ் தமிழென்று தானென்ற அகங்காரம் கொண்ட
வார்த்தைகளின் பணக்காரர் கேட்டார்
பூகம்பம் குவைத்தில் ஆங்கில மொழியிலா
வந்ததென்று …
விழுந்தடித்து ஓடி வந்தோர் கையில்
கைபேசியும் மனதில் மரண பயமும்
அன்றி வேறெதுவும் இல்லை ..
ஒன்று மட்டும் புரிந்தது
இறைவன் நினைத்தால் ஒரே நொடியில்
வசதிகள் கொண்டவனும் அகதியே
அவன் நினைத்தால் மரணம்,
அது எங்கு மறைந்திடுனும் வந்தே தீரும்!
ஆக்கம் ஈழத் தென்றல்