நிறைந்த உறவுகளோடு இத்தாலி மண்ணில் நடந்தேறிய அ.ஜெயசீலன் அவர்களின் இரு நூல்களின் வெளியீட்டு விழா.
இத்தாலி வாழ் படைப்பாளி அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன் அவர்கள் எழுதிய ‚புலத்தின் கனவு‘ மற்றும் ‚குளிர் விடும் மூச்சு‘ ஆகிய இரண்டு கவிதை நூல்களும் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈழத்தில் வெளியிட ஏற்பாடாகி இருந்தது. நாட்டில் ஏற்பட்ட அசாதராண சூழ்நிலை காரணமாக அது தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த இரண்டு நூல்களும் இத்தாலி மண்ணில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. 06.07.2019 சனிக்கிழமை இத்தாலியின் கோல்டன் திரையரங்கில் இரவு 08.00 மணிக்கு நூல்கள் வெளியீட்டு விழா ஆரம்பமானது. நிகழ்வுக்கு இத்தாலி தமிழர் ஆன்மிகப் பணியக இயக்குநர் அருட்பணி பீற்றர் இராசநாயகம்(அமதி) தலைமை வகித்தார். முன்னதாக பங்கேற்பாளர்களுக்கான வரவேற்பு இடம்பெற்றது. தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஆரம்ப நிகழ்ச்சிகளை ரொகானி நிரோஜன் தொகுத்தளித்தார். தமிழ்த்தாய் வாழ்த்தினை திலீபன் பாடசாலை மாணவர்கள் இசைத்தனர். தொடர்ந்து நாரந்தனை கீதம் இசைக்கப்பட்டது. வரவேற்பு நடனத்தினை நுண்கலைமாணி கஸ்தூரி ரமேஸ் நெறியாள்கையில் நிருத்தியாலயா நடனப் பள்ளி மாணவிகள் வழங்கினர்.
தொடர்ந்து தலைமையுரை இடம்பெற்றது. நூல்களின் அறிமுக உரையினை எழுத்தாளர் பொன்னரியம் நிகழ்த்தினார். நூலினை இரு நூல்களின் ஆசிரியர் அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன் அவர்கள் வெளியீட்டு வைக்க, முதற் பிரதிகளை இத்தாலி ஆன்மிகப் பணியக இயக்குநர் அருட்பணி பீற்றர் இராசநாயகம்(அமதி) பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டோர் நூல்களை பெற்றுக்கொண்டனர்.
‚புலத்தின் கனவு‘ நூலின் ஆய்வுரையினை இலண்டன் வாழ் எழுத்தாளர் நவஜோதி யோகரட்ணம் நிகழ்த்தினார். ‚குளிர் விடும் மூச்சு‘ நூலின் ஆய்வுரையினை இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த அருட்பணி ஆரோக்கியம் சவரி நிகழ்த்தினார். தொடர்ந்து எழுத்தாளர் அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன் அவர்களினால் தாயகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் நிகழ்ச்சிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டுத் திட்டங்களின் காணொளி காண்பிக்கப்பட்டது. அதனையடுத்து நூலாசிரியர் அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன் அவர்களுக்கு, நாரந்தனை மக்கள் நலவாழ்வு சங்கம், இத்தாலி புனித சூசையப்பர் திருச்சபை ஆகியவற்றினால் கெளரவிப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அருட்பணி அந்தோனி ஜேசுரட்ணம், நாரந்தனை மக்கள் நலவாழ்வு சங்கத்தினைச் சேர்ந்த குருசு ஜெயசீலன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக சச்சிதானந்தம் ஆகியோரும் வாழ்த்துரை அளித்தனர்.
ஏற்புரையினை இரு நூல்களின் ஆசிரியர் அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன் வழங்கினார். நன்றியுரையினை நூலாசிரியரின் துணைவியார் கலிஸ்ரா அந்தோனிப்பிள்ளை வழங்கினார். நூலாசிரியர் அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன் அவர்கள் அரங்கக் கலை சார்ந்த செயற்பாடுகளிலும் தொடராக ஈடுபட்டு வருபவர். தாயக மாணவர்களுக்கான தொடர்ச்சியான கல்வி ஊக்குவிப்புத் திட்டங்களையும் செயற்படுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.