செம்பருத்தி சிவந்திருக்க
ரோஜாக்கள் அழகு தர
வண்டுகள் ரீங்கரிக்க
மல்லிகை மணங்கமழ
தென்னோலை சரசரக்க
அணிலொன்று தொப்பென்று
முற்றத்தில் வீழ்ந்து
மாதுளையில் தாவி
மயாமாய் மறைந்தது
கொடிப்பூ போட்ட
கோடிச் சட்டையுடன்
தங்கை
கொலு போல இருந்தாள்
அசைந்தாலே
சட்டை நலுங்கிப் போகுமென்று
அசையாது இருந்தாள்
வெடி வேண்டுமென்று
தம்பி அடம் பிடித்தான்
பகட்டாகப் பட்டுடுத்திய
பக்கத்து வீட்டு மாமி
வீதியிலே பவனி வந்தாள்
மகன் வெளி நாட்டிலாம்
நரகாசுரனை வதம் செய்த கதை பற்றி
பாட்டி குட்டிப் பிரசங்கமே செய்தாள்
வெளியிலே போன அப்பா
பங்கிறைச்சியுடன் வந்தார்
அள்ளி முடித்த ஈரத்தலையுடன்
அம்மா அடுக்களையில் மாய்ந்தாள்
பால் குடித்த ஆட்டுக்குட்டி
பரவசமாய் துள்ளி வந்து
குரோட்டனில் ஒரு கடி கடித்து
மீண்டும் தாய்முலை வாய் பதித்து…
சின்னச் சின்னதாய்
நெஞ்சை நிறைத்த சந்தோசம்
அன்றைய தீபாவளியில்
இன்றைய தீபாவளியில்
அருகில் மாதுளையும் இல்லை
மரம் தாவும் அணிலும் இல்லை
குட்டிப் பிரசங்கம் செய்ய
பாட்டியும் இல்லை
பட்டாசும் இல்லை
எம்மவர் வதைபடும்
அவலக்கதை மட்டும்
சேதியாய் தினம் வரும்
அது கேட்டு மனம் கொதித்து
உடல் தகித்து
கண்ணீரைச் சொரிகையிலும்
கள்ளமாய் சில நினைவுகள்
உள்ளத்துள் ஒளிந்திருக்கும்
அன்றைய தீபாவளியும்
அதனோடு வெல்லமாய் இனித்திருக்கும்
ஆக்கம் சந்திரவதனா செல்வகுமாரன்