நிஜங்களின் தரிசனம்..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

அன்று அம்மாவின்
அணைப்பில் ஆனந்த சயனம்.
முந்தானையில் கிடைத்த சுகம்
முழுமையானது.குளிருட்டியாய்
சூடேற்றியாய் கதகளிப்பு…

அந்த முந்தானை முடிச்சில்
முடிந்து வைத்த சில்லறை
சீனி முட்டாயாக மாறிய நாட்கள்
அத்தனையும் தனி சுவையே..

கலியாண வீடுகள் கொண்டாட்டங்கள்
போய் வரும் போது நெஞ்சு சட்டையினுள்
பலகாரப் பை ஒழிந்திருக்கும்..
தனக்காக வாழாது தன் பிள்ளைகளை
எண்ணி வாழ்ந்த புனித ஜீவன் அம்மா..

பருவம் தாண்டி சில நாளிலேயே
திருமணச் சந்தையில் எனக்கான
வரனுக்கு விலை பேசித் தீர்த்து
தான் வாழ்ந்த வீட்டையும் வளவையும்
சீதணமாக அள்ளி வழங்கிய வள்ளல்.

வளர்த்த கூலி. தரகு கூலியென
கையிருப்பைக் கரைத்து என்னை
கரை சேர்த்த கருணை உள்ளம்
குந்தக் குடிலின்றி ஆச்சிரமத்தில்..

நானும் இப்ப வெளி நாட்டில்
கூட்டுக் குடும்பமாகச் சில நாள்.
கூட்டிப் பெருக்கி கொடுமைகளால்
கனவுக்கும் தீ மூட்டி விவாக ரத்தாகி
ஆச்சிரமத்தில் என் வாழ்க்கை…

பாதி நேரம் படிப்பும்
பாதி நேர வேலையுமாக நகருது
வெளி நாட்டு வாழ்க்கை.
படிக்கனும்.படிப்பிக்கனும்.படிக்கிறேன்
வாழனும் வாழ்ந்து காட்டனும் என் அவா.

பூமி சுற்றுகின்றது.இரவு பகல்
வந்து போகின்றது.வாழ்க்கையில்
மாற்றம் ஒன்று தானே மாறாதது.
நம்பிக்கை தும்பிக்கை பலமாயிருக்கு.
செயலாக்கி நிமிர்வதே இலக்காச்சு…