நாமும் மனிதரே…!

 

வானம் முழுக்க மழை மேகம்
நிலம் நிறைந்த ஈரம் – ஆனால்
நாங்கள் நா நனைக்க
நீரின்றி கிடக்கிறோம்

தேன் குடிக்கும் ஈக்கள் கூட்டம்
ஊர் முழுக்க மொய்த்து கிடக்க
உயிர் வாழ தீனி கேட்டு – உரிமைக்காய்
இறைஞ்சி கிடக்கிறோம்

எங்கள் கரங்கள் தேய்ந்து
என்புகள் பாழடைந்து
தேகமே புண்ணாக்கப்பட்டு – சாவுக்காய்
தேம்பிக் கிடக்கிறோம்

எங்கள் வீட்டு கூரைகளில்
ஊடுருவும் நட்சத்திரங்கள் கூட
வெளிப்பற்று இருட்டுக்குள் – ஒளிக்காய்
துடிப்பற்று கிடக்கின்றோம்

எங்கள் இதயங்கள்
இரும்புகளால் இணைக்கப்பட்டு
மின் மெழுகால் முலாம் – பூசி
நிமிர்ந்த ரோபோக்களல்ல

உங்களால் திருகப்படும்
திசைகளில் ஆட நாமெல்லாம்
சுருள்கள் நிறைந்த – உங்க
சிறுமி விளையாட்டு பொம்மைகளல்ல

வெடித்த கொப்பளங்கள்
வடிக்கும் சீள்கள் குடித்து
ஏப்பமிடும் உங்கள் சுரண்டல் -பசிக்கு
இத்தாலிய பிக்‌ஷாக்களல்ல

உங்களைத் தான் கேட்கிறோம்
நாங்கள் நடந்த பாதைகளில்
புற்களை வளர்த்து சிரிக்கும் – உங்கள்
கொடூரங்களை விட்டுவிடுங்கள்

லெனின் கண்ட கனவின்
உடைசல்களையாவது எங்கள்
வலிகள் மாற்றும் – புது
மருந்தாக மாற்றுங்கள்

வாழ விடுங்கள் எங்கள்
உடலை உண்டு விட்டு
கருகிய கரை என – உங்கள்
வீட்டு தங்க குப்பை கூடையில் வீசாதீர்

உயிருள்ள, உரிமையுள்ள,
உணர்வுள்ள மானிடர் நாம்
எம்முடல் நரம்புகளால் – நன்று
கட்டப்பட்ட இரத்த கூடு.

நெடிய வளர்ந்த மரங்களின்
வேர்களிடையே நாங்கள் பதுங்க
ஆசை கொள்ளவில்லை – உமைபோல்
நாமும் துளிர்க்க விரும்புகிறோம்

படர்ந்து பரந்து சூரிய ஒளியை
எம்மிடமிருந்து பறித்து எம்மை
முடக்கி விடாது முயல விடுங்கள் – நாம்
முளைவிட்டு நிமிர்கிறோம்

எங்கள் மீது பூசப்பட்ட முதலாளித்துவ
சேற்றை கழுவ விடுங்கள்
நாங்கள் நாங்களாகவே – நிமிர்ந்து
மனிதர்களாக வாழ்கிறோம்

இன்னும் ஒரு மே வரும் உம்மிடம் உரிமை கேட்கும் நாள் பிறக்கும்
அமைதியாய் ஓர் நாள் விடுப்பு – அனுமதி
தந்து சம்பளத்தை புடுங்கி கொள்வீர்.

மறுநாள் எம்மில் ஊறும் – தேன்
குடிக்க காத்திருபீர்
நாமும் ஊற்றெடுக்கும் வியர்வையை
துகிலுரித்து குருதி சிந்தி கிடப்போம்

நீங்கள் மலர்ந்து காய்த்து பழமாகி
விதையாகி மீண்டும் முளைத்து….
எங்கள் ஈரத்தை உறிஞ்சி – உச்சமாய்
நெடிந்துயர்ந்து செல்வீர்கள்.

நாங்கள் எங்கள் வியர்வையை
பரிசாக்கி காய்ந்த கரங்களின்
புண்களுக்கு மருந்தாக எங்கள்
மண்ணை பற்றி கொள்வோம்…

************************************
கவிமகன்.இ

Merken