நான் மன்னித்துக்கொண்டேயிருப்பேன்
மரணத்தை அருகிருந்து
பார்த்த காலங்கள்
அத்துணை நம்பிக்கை வாய்ந்தவை அல்ல
நிலாக்காலங்களில்
செந்நிறம் பூசிய வீதிகளில்
நடந்திருக்கிறேன்
புத்தனோடு கதைத்தபடி
உறங்கியிருக்கிற நாட்களின்
அதீத சுவை
என் தலையணை முழுவதும்
இன்னமும் வீசுகிறது
நான் மன்னித்துக்கொண்டேயிருப்பேன்
துரோகிக்கத் தெரியாதவனாய்
வஞ்சகர்களுக்காக
இதயத்தை திறந்து வைத்ததால்
நான் மன்னிக்கத் தெரிந்த
ஒருவனாக இருக்கவேண்டும்
அதிக கெட்டவார்த்தைகளை
பேசுவது பற்றியும்
அதிகமாய் போதை ஏற்றிக்கொள்வது
பற்றியும்
நீங்கள் கூறும் முரணில்
இருந்து எதிர்மறை கொள்கிறேன்
அதிகம் கோவப்படத் தெரிந்தவனுக்கு
அதிக கெட்டவார்த்தைகள்
தெரிந்திருக்கவேண்டும்
அப்போதுதான் கெட்டவார்த்தைகள்
மீதேறி கோபத்தை
வெளியேற்ற முடியும்
நான் மேலேறுவேன்
நான் பறப்பேன்
உங்கள் சதிகளின் மீதேறி
இன்னும் வேகமாக…
என் மூதாதையர்
எனக்கு துரோகம் பற்றி
கற்றுத் தரவில்லை
ஆனாலும்
துரோகிக்கப்பட்டுக்கொண்டிருப்பேன்
நான் பழுத்துவிட்டதாய்
பலர் நினைக்கலாம்
எல்லாமே என் மீது
விழும் கல்லெறிகளால்
உருவானவை
மரணம் எனும்
பரிபூரணத்திலிருந்துகொண்டு
வாழ்க்கையை ஆராய்பவன்
நான் உங்களை மன்னித்துக்கொண்டேயிருப்பேன்
நான் இறக்கும் தறுவாயிலேனும்
யாரேனும் உரத்துக் கூறுவார்கள்
அவன் மன்னித்தலில்
அதிக பற்றுதல் கொண்டதால்
எப்போதும் துரோகங்களை
மட்டுமே
அணைத்துக்கொண்டவன்
– அனாதியன்-