நானெனப்படுவது என் பெயர்

உடலை உரித்து உரித்து
உள்ளிருக்கும்
உயிரைப்
பற்றிப்பிடித்தேன்
சூன்யம் படர்ந்த
கையிறுகலின் இருட்டில்
ஒழிந்துகொண்டது
உயிர்

விரல்களை சீவத் தொடங்கினேன்
ஒவ்வொரு துளி
குருதியாய் வடித்தேன்
என்பின்
ஒவ்வொரு கீலங்களையும்
பூதக்கண்ணாடியால்
பரிசோதித்தேன்

விரல்கள் சீவி முடிந்ததும்
உள் நுளைந்த விழிகளுக்கு
உயிர்
தென்படவில்லை

உயிர் கண்களுக்குள் சென்று
ஒழிந்து கொண்டது
இப்போது
கண்களை
எழுத்தாணிக் கூரால்
குத்தி வெளியெடுத்தேன்

உயிர் ஒரு
பிரம்மாண்ட உருவமாய்
என் முன் நின்று
சிரித்தவாறு கூறியது
இதோ நான்
இங்கிருக்கிறேன்

பிதுங்கிய விழிகளும்
சதைகளும்
குருதியும்
சேர்ந்து சிரித்தன

அப்போது
ஒளியற்ற
உலகத்துள்
உயிரை கற்பனை செய்து
கொண்டேன்

பாவம் உடல்

துய்த்தலின்றி
தொடுதலின்றி
புணர்தலின்று
இரசித்தலின்றி
பிணமென அழுகியது

எல்லாம் மாயை என
மேலெழுந்த புகை
சிரித்தது

– அனாதியன்-