மூன்று அவ்வையார்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதுபோல் பட்டினத்தார் என்ற பெயரில் மூன்றுபேர்
வாழ்ந்தார்கள் என்று தருமபுரம் ஆதினம் 2002ம் ஆண்டு
வெளியிட்ட „சைவ சமயம் -வரலாற்றுப் பார்வை „என்ற நூல் கூறுகிறது.திருமுறைப் பட்டினத்தார் (பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்) சித்தர் பட்டினத்தார் (14ம் நூற்றாண்டின் இறுதி) பிற்கால போலிப் பட்டினத்தார்
(17ம் நூற்றாண்டு) என்று மூன்று பெயர்களை அந்த நூல் குறிப்பிடுகிறது.எனினும்,பட்டினத்துப் பிள்ளையார் இருவர் அல்லது மூவர் வாழ்ந்தார்கள் என்பதற்கு போதிய சான்றுகள் இன்றுவரை இல்லை. சென்னை உயர்நீதிமன்றில் நீதிபதியாக இருந்தவரும்,சிறந்த சிந்தனையாளருமான திரு கிருஸ்ணசாமி அவர்கள்
‚பட்டினத்தடிகள்“ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை 1977ல் எழுதினார்.அதில் விரிவான ஆராய்ச்சிக்கு பிறகு
„பட்டினத்து அடிகள் ஒருவரே“ என்று முடிவு செய்து நீதிபதி கிருஸ்ணசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும் பட்டினத்தார் அருளிய திருப்பாடல்கள் சில உயர் நடையிலும்,சில எளிய நடையிலும் இருக்கின்றன என்பதே உண்மை.
எல்லோருக்கும் அவரின் தாயார் இறந்தபோது அவர் பாடிய பாடல்கள் தெரிந்திருக்கும் குறிப்பாக
„ஐரெண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்று“
„முந்தித்தவம் கிடந்தது முன்னூறு நாள் சுமந்து“
„அரிசியோ நானிடுவேன் ஆதால் தனக்கு“
„முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யானுமிட்ட தீ மூள்க மூள்கவே“
போன்ற பாடல்கள் மிக பரிட்சயமான பாடல்கள்.
ஆனால் அவர் தன் கச்சியேகம்பனை நினைத்து
பாடிய பாடல்கள் மிக பொருள் நிறைந்தவை அதில்
ஒருபாடல் இன்று பார்ப்போம்
„நாறும் உடலை நரிப்பொதி சோற்றினை நானறியும்..
சோறும் கறியும் நிரப்பிய பாண்டத்தை தோகையர் தம்
கூறு மலமும் இரத்தமும் சேரும் குழியில் விழாது..
ஏறும்படி அருள்வாய், இறைவா கச்சி ஏகம்பனே..“
கடவுளே…இந்த நாற்றம் வீசுகின்ற உடலை…
நரிகளுக்கு உணவாக போகின்ற இந்த பிண்டத்தை..
நான் தினசரி சோற்றாலும்,கறியாலும் நிரப்புகின்ற பாத்திரத்தை.பத்திரப்படுத்த அருள் தாரும்…
என்னை..பெண்ணின் மலமும்,இரத்தமும் சேரும் குழிக்குள் விழாமல்,
காப்பாற்றும்..கரையேற்றும்.. என்பதாகும்