நம்பிக்கைக்குரிய நண்பர்
யாருமில்லை உலகில்! “ என்று
ஓர்கருத்தைச் சொன்னாய்.
„உண்மையதுதான்!“ என்றேன்.
உன்கருத்துக்குள்ளே
ஒளிந்திருக்கும் நண்பர்களில்
நானும் ஒருவனன்றோ?
நான் ஏன் அதை மறந்தேன்?
உன்கருத்தை எனதாக
ஒப்புவித்த வேளையிலும்
நீயும் ஓர் நண்பனென
நிற்பதனை நான் உணர்ந்தேன்!
„நம்பிக்கைக்குரிய நண்பர்
யாருமில்லை உலகில்!“ எனில்
நான் உனக்கும் நீ எனக்கும்
நம்பிக்கையற்றவரே!
ஓரிருவர் தவறிழைப்பர்
உற்றவர்க்கே தீங்கிழைப்பர்
ஆரெவரோ செய்வதெல்லாம்
அனைவர்க்கும் பொதுவல்ல
ஒட்டுமொத்தமாக
உறவுகளைப் பழிப்பதையும்
பட்டதுயர் போதுமென்று
பதுங்கியிருத்தலையும்
விட்டுவிடு! இவ்வுலகம்
விரிந்தே கிடக்கிறது!
பற்றுவைத்து மற்றவர்க்காய்ப்
பாடுபடும் மனமிருந்தால்-
நம்பிக்கைக்குரியவரே –
நானும்தான் நீயும்தான்!