நினைவுகளைப் பதிவாக்கும் வயதில் ஆரோக்கியமான உளவியல் சார்ந்த
பதிவுகள் சிறார்களுக்கு அவசியமாகிறது.
3-5வயது வரையான அகவையில் சிறார்கள் தன்னையும் ,தன்னைச் சார்ந்த சூழலையும் அறிய முயல்கின்றனர்.
இந்தச் சூழலை உருவாக்கி கொடுக்கவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு.ஆனாலும் அதிகமான பெற்றோர் தன்னையே அறியாத சிறார்களிடம் கல்வியறிவைப் புகட்ட முனைகின்றனர்.
மழலை மொழி பேசி மகிழ்ச்சியைப் பதிவாக்கி இயற்கையோடு இயற்கையாகி இயல்பாக முதிர்ச்சியடைய வேண்டிய சிறார்களின் கைகளில் எழுதுகருவியும்,தோள்களில் பள்ளிப்பையும்.
அறிவுக்கண்கள் திறப்பதற்காக மூன்று வயதில் மூக்குகண்ணாடியும்.
கொடுமையான தண்டனை இதுவென்பேன் !
நானும் அறியாமைக்குள் அகப்பட்ட தாயாகவும்,ஆசிரியையாகவும் பயணித்தவளே.
வாழ்வியல் சூழலில் ஏற்பட்ட பலதரப்பட்ட அனுபவங்களும்,பன்பட்ட மனிதர்களின் விழிப்புணர்வும்,எனது உளவியல் கல்வியுமே என்னையும் மாற்றி சிந்திக்கத் தூண்டியது.
இதன் விளைவாக சுவிற்சர்லாந்து நாட்டின் சிறார்களின் முதன்மையான உளவியல் இடமான விளையாட்டுப்பள்ளியை நோக்கி கடந்த வருடம் பயணித்தேன்.
அப்போதே புரிந்தது விளையாட்டுப்பள்ளிகளின் விரிவாக்கம் எதுவரையில் ஊடுருவியுள்ளதென.
1.மொழியின் தேவைக்கான விளையாட்டுப்பள்ளி.
2.காட்டு விளையாட்டுப்பள்ளி.
3.பண்ணை வீட்டு விளையாட்டுப்பள்ளி.
என பலதரப்பட்ட விளையாட்டுப்பள்ளிகள் சிறுவர்களை ஆரம்ப பள்ளிக்கு உடல் உள ரீதியாக தயார்படுத்துகின்றன.
குறிப்பாக :விளையாட்டின் ஊடாக வாழ்வியல் மொழியை உள்வாங்கல்.
இயற்கையோடு இயற்கையாக விளையாடுவதன் மூலம் சுற்றுப்புறச்சூழலை உற்று நோக்கல.
பண்ணை வீட்டு விளையாட்டுப்பள்ளி ஊடாக சக உயிர்களின் வாழ்வியலையும்,எளிமைத்தன்மையினையும் உணர்தல்.
மற்றும் கடிண ,மென்மைத் தன்மையான செயல்பாட்டினை விளையாட்டின் மூலம் பலதரப்பட்ட சூழலில் கற்றல்.
அத்தோடு கூட்டு ஒற்றுமை,சமூகத்தொடர்பு,தனித்துவமாக இயங்குவதற்கான ஆளுமை போன்ற எண்ணற்ற ஆளுமைப் பண்புகளை விளையாட்டின் ஊடாகவே இயல்பான பிள்ளை மனத்துடன் பதிவாக்கல்.
அதீத ஆர்வமும்,எதிர்காலத் திட்டமும் ,சிறார்களின் உளவியலும் ,உற்சாகமாக ஓர் வருட காலக் கல்வியை பூர்த்தி செய்ய வைத்துள்ளது .
தனித்துவமாக இந்த நாட்டில் விளையாட்டுப்பள்ளியை கட்டமைத்து நிர்வகிக்கும் பொறுப்பை கடிண உழைப்பு கையளித்துள்ளது.
சிறார்களில் ஒருத்தியாக முழுமைபெற பயிற்சி பெறுகிறேன் அவர்களின் புன்னகை மூலம்…….-
வாணமதி.