ஒரு நீள் பொழுதின்
யாகத்திற்காக
தீயில் இறங்கி நின்று
தீர்த்தம் ஆடுகிறது
உற்சவ மனம்…
“காரணங்களைக் களவாடும்
எந்த மனிதனும் திருடன் தான்”.
விண் கட்டிய பட்டம்
சங்கீதம் இசைப்பதை
வானேற்றிய காற்று
சாரீரத்தால் சமர்ப்பித்தது.
ஏத்துணை போன
முகவரி இல்லாத முகங்களிடம்,
ஞானப் போதிப்பைக் கற்பித்தது
புயலில் பாகு விற்கும் நாளாந்தம்.
தனி மரத்தின் அனுபவம்
சோலையின் அற்புதத்தை
மிஞ்சி வாழ்க்கை சொன்னது.
வரம் வேண்டி நிற்கும்
மனங்களின் நிறம் என்ன?
நூலிடையில் நூதனங்களை
நுகர்ச்சி செய்கிறது தவமனம்.
அந்தப் பாரம்
அந்தப் பாதை
அந்தப் பயணம்
அந்த மரணம்
அந்த என்ற தொலைவு
தவமனதின் அனுபவமாகிறது.
அதுவே வாழ்வின் அகராதியாகிறது…
நெருப்பு என்ற சுடு சக்தியை
நெஞ்சில் வைத்து நிமிர்கிறது
தத்துவம் சுரக்கும் தவமனம்…
கலைப்பரிதி.