தமிழ் வானம் ஏன் அழுகிறது

குளங்கள் ஆறுகளாய் மேவி
கடலைக் கடக்க இன்னும் ஏன்
என் நகரம் மிதக்கிறது
தமிழ் வானம் ஏன் அழுகிறது
குண்டு வீச்சிலும் போர் கணையிலும்
யுத்தத் தாண்டவத்தின்
இரத்தக் கறை மாற முன்பே
சொந்தங்களை தாரை வார்த்தது
போதாதென்றா
வானம் இடிந்து கொட்டுகிறது

சிறுகச் சிறுக சேமித்த – காலபோக நெல்வயல்
அள்ளுண்டு அழிய
பட்டினிப் பிசாசை ஏன்
பறை அடிக்க நினைக்கிறது
மூன்று தசாப்த முட்புதர் தெருக்கள்
வெள்ளைப்பிச்சையில் கறுப்பு காட்டி
மிரட்டி அறுத்தோடி கரைக்கவா
கண்ணீராய் பொழிகிறது
ஐயகோ. …எங்கள் தமிழ் மண்
அடித்துச் செல்லப்பட்டு விடுமோ
அமைதி இழந்து ஆறாய் ஓடுகிறது

மேகமே
உன் கோரப்பசி தீர்க்க
குழந்தைத் தமிழிலா எறிவீச்சு
மையங்கொண்ட புயலே
சற்றே நகர்ந்து செல்
நத்தையாய் நகரும் என்
செத்தையை அள்ளிச் செல்லாதே
மூர்க்கம் கொண்டு முகை அவிழ்க்காதே
மொத்தமாய் அமிழ்த்திவிடு
இந்து சமுத்திர முத்திற்குள்

போதும் போதும் என்றாகி
மோத முடியாது தவிக்கும்
பாதி உயிர்களை பலி எடுக்காதே
வங்கக் கடலே கொஞ்சம் நகர்
பங்கம் விளைவிக்காதே
உன்னுள்ளேயே சங்கமி
உமிந்து விழுங்கு

குமாரு. யோகேஸ்