தமிழே நான் உனைப் பாட

தமிழிலே கவிதைகள்
தினம் நூறு செய்வேன்
தமிழ் பேசாத் தமிழரை
எழுத்தாலே கொய்வேன்
என் பிள்ளை நற்பெயரை
பிறமொழியில் வையேன்
தமிழ் பேச மறந்திட்டால்
எப்படி நான் உய்வேன்

தமிழின்றி எமக்கிங்கு
மரியாதை இல்லை
தமிங்கலத்தால் எந் நாளும்
தமிழுக்குத் தொல்லை
தமிழை யார் பழித்தாலும்
எறிவேன் கருங் கல்லை
மொழிகளிலே தமிழ் மட்டும்
வாடாத முல்லை

எந்நாடு சென்றாலும்
தமிழே எம் மூச்சு
தமிழாலே வாதிடு
அதுவே வாள் வீச்சு
எமக்கான மரியாதை
தமிழாலே ஆச்சு
தமிழை நீ விற்றால்
உன் தாய் மானம் போச்சு

தமிழுக்கு உள்ளதே
ஒரு கோடி தொன்மை
தமிழ் பேசும் மனிதருள்
குடியேறும் வண்மை
தமிழோடு உறவாடு
அமையும் நற் கேண்மை – நான் 
சொல்கின்ற அத்தனையும்
அழியாத உண்மை

கால்களின் அழகுக்கு 
சிலப்பதிகாரம்!
கைகளில் குலுங்கிடும்
வளையாபதி!
கொடியிடை போர்த்திட
சிந்தாமணி!
நெற்றியில் சூரியன் போல்
மணிமேகலை!
காதுகள் பூண்டிடும்
குண்டலகேசி!

போதுமா தமிழ்த்தாயே
பொன்னணி கலன்கள்
போதாது போதாது 
இதையும் பூண் என்றே
போர்த்தினான் வள்ளுவன்
ஆயிரக்கணக்கில்(1330) ஆரங்கள்
இன்றும் தருகிறார் எம்மவர்கள்
தரமான நகைகள்

தமிழே நான் உனைப் பாட
துணையாய் நீ வேண்டும்
தரணியே ஓர் நாள்
உன் பொன் அடி வேண்டும்

……அனைவருக்கும் உலக தாய்மொழி தின 
நல் வாழ்த்துக்கள்……….

– அனாதியன்-