புழுதியாற்றில் வீசப்பட்ட கச்சல்களின்
அழுகையாற்றை மாற்றாத செவ்வானமே–நானோ
கழுகுகளின் சிறகுமீளும் வரை காத்திருக்கிறேன்
மலைகளின் பிளவுகளிலல்ல…
இருண்டுபோன மயான தேசவிளிம்பதில்…
ஏன் எதற்கு என்று கற்களிடம்
வேண்டுதல் செய்யவா..?
காலம்தந்த கடவுளைத் தொலைத்த இனமல்லவா..
மறதிக்கும் மருந்திட்டு வெற்றிகண்ட நவீனமே..!
அறுதிக்கும் நினைக்க வேண்டியதை
மறந்ததில் என்ன நியாயம்..?
பூவிலிருந்த மகரந்தவாசம்
மலவாசலில் பூசையிடவா..?
தேன்மொழி நாவது தீட்டை
பிரதிஷ்டை செய்யவா..?
வானகத்துத் தேவதையோ
விரகப்பசியின் தாளுடைக்கவா..?
மானப்பறவையது மார்புதிறந்து
மல்லாந்து மண்டியிடவா..?
எப்படியோ நகர்ந்து ஓடிய பூகோளச் சுழற்சியது
எட்டுமுறை சூரியனைச் சுற்றிமுடித்தும் நகர்கிறது.
கட்டவிழ்த்த மங்கையின் சேலையோ கசங்கியபடி காலில் வழிந்தோடிய இரத்தக்கறை ஈரத்துடன்..
மொட்டவிழமுன் முதிர்வடையும் மூர்க்கமும் முழுநிலாவின் மரபாச்சு..
நானும் நவீனத்தில் புதைய
பலமுறை போராடித் தோற்றேன் மனதிடம்..
நிஜங்களை புதைக்க மனதில்
இடமில்லாதே போனது.
பழையதைப் பேசியபடி ஆற்றுப்படுத்தும்
ஆவலும் தோல்வியே.
என் இனமோ வேகமாக
எல்லாம் மறந்தபடி மாயையில் ஓடுதே..¡