23/06/2019 ஞாயிறு மாலை 3 மணிக்கு செல்வி.ரஜிதா இராசரத்தினம் அவர்களின் „மணற்கும்பி“ நூல் வெளியீட்டு விழா, குடத்தனை மேற்கு (மணற்காட்டுச் சந்தி) சுடரொளி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. அரங்கு நிறைய அறிஞர் குழாம்; சிறப்பான ஒழுங்கமைப்பு; பாராட்டத்தக்கதாக நிகழ்ச்சி அமைந்திருந்தது.
மதிப்புக்குரிய சிந்துதாசன் அவர்கள் சிறப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்துத் தலைமை தாங்கியிருந்தார். ஒவ்வொருவர் பேச்சுத் தொனியையும் (Points ஆக) விழித்தமை கேட்போருக்கு மகிழ்வைத் தந்தது. அறிமுகவுரை ஆற்றிய தம்பி குடத்தனை சிவா (சிவசேகரன்) பன்னிரு படைப்பாளிகளும் இருபத்தொன்பது படைப்பும் இலக்கிய உலகில் வடமராட்சி கிழக்கை அடையாளப்படுத்தியது எனவுரைத்தார்.
வடமராட்சி கிழக்குக் கலாச்சார உத்தியோகஸ்தர் மதிப்புக்குரிய செல்வசுகுனா சேனாதிராசா அவர்கள் தமது பிரதேசத்தில் போட்டிபோடக்கூடிய சிறந்த படைப்பாளிகள் இருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார். நயப்புரை வழங்கிய அஜந்தகுமார் அவர்கள் சிறப்பாக „மணற்கும்பி“ நூலை அலசியிருந்தார். செல்வி.ரஜிதா இராசரத்தினம் அவர்கள் ஏற்புரை, நன்றியுரை தெரிவித்தார்.
நிகழ்வினைக் கவனித்தும் உரைஞர்களின் பேச்சறிந்தும் வடமராட்சி கிழக்குப் படைப்பாளிகள் தமிழ் இலக்கிய உலகிற்கு மென்மேலும் சிறந்த பணியாற்றத் துடித்துக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஏனைய பிரதேசப் படைப்பாளிகளும் முயன்று தமிழ் இலக்கிய உலகிற்கு வலுச்சேர்க்க முடியும்.