சிறுகதை.புரிதல்- இந்துமகேஷ்

மெளனமாய் வானத்தை வெறிக்கையில் தொலைந்துபோன காலங்களோடு தூரப்போய் விட்ட வாழ்க்கைக் கனவுகள் மங்கலாய்த் தெரிந்தன.

எப்போதும் எங்காவது ஒரு ஓரத்திலேனும் ஒட்டடையாய் ஒட்டிக்கொண்டிருக்கும் முகில் எதுவுமின்றி சுத்தமாய்த்
துடைத்துவிட்டாற்போல் தூய்மையாய் விரிந்து கிடந்தது வானம்.

இந்த வானம்போல் இந்த மனமும் இருந்துவிட்டால்..?

ஆனால் முடிவதில்லை.

இப்போதோ இன்னும் சற்றுப்பொறுத்தோ இந்த வானம் முகில்களால் மறைக்கப்பட்டுவிடும்.
அல்லது இருளால் மூழ்கடிக்கப்பட்டுவிடும்.

இதுபோலத்தானே மனமும்?

எப்போதேனும் எந்த நினைவுமின்றி எந்தவிடயத்தையாவது அசைபோடாமல் இந்த மனதால் இருந்துவிடமுடிகிறதா?

பல சந்தர்ப்பங்களில் சின்னச்சின்ன நினைவுகளைக் கடந்துவிட்டு „எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை எனக்கு எந்தச்சிக்கலுமில்லை

நான் ஏன் கவலைப்படவேணும்?“ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டு…
சில கண நேரங்களுக்குமட்டும் அமைதிகாக்கிற மனது அந்த நொடிப்பொழுதுகளுக்குமட்டும் இந்த வானம்போல் தெளிவாய் இருப்பதுபோலத் தோற்றம் காட்டும்.

„அப்பா உங்களைத் தேடிக்கொண்டு அந்த மாமி வந்திருக்கிறா!“

„ஆர்…?“

வானம் தெரிவதுபோல் அருகில் இருப்பவரைத் தெளிவாகப் பார்க்கமுடிவதில்லை.

கண்களுக்கும் காட்சிக்குமிடையே ஒரு கண்ணாடித்திரை தேவையாய் இருந்தது.

மங்கலாகத் தெரியும் மகளின் முகம்.

அவளும் இப்போது நாற்பதைத் தாண்டிக் கொண்டிருக்கிறாள்.

அவள் பெற்ற மகனும் இப்போது காதல் என்று அலைகிற வயது.

„ஆர்..ஆரம்மா..?“

பார்வை குறைந்தாலும் குரலில் அந்தத் தெம்பு மாறவில்லை.

„வந்து பாருங்கோவன்!“

„ஆர்..?“ என்று மறுபடியும் தன்னைத்தானே கேட்டுக்கொண்டு யன்னல் வழியாக வெளியே தெரிந்த தூய்மையான வானத்தைவிட்டுவிட்டு
உள்ளே திரும்பிய போது எதிர்ப்பட்ட முகத்தில்-எப்போதோ அவரைவிட்டுத் தொலைந்துபோன அவள்..

„இதுதானா..இதுதானா..
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா..?

பக்கத்து அறையில் வானொலி வழியாக வந்துகொண்டிருந்த சின்னக் குயில் சித்திராவின் குரலோடு சேர்ந்து மகளின் பதினாறு வயது மகளும் பாடிக்கொண்டிருந்தாள்.

காகம் உட்காரப் பனம்பழம் விழுகிற கதையாய்..

என் பிரியமானவள் வந்து நிற்கிறபோது என் பேத்தி பாடிக்கொண்டிருக்கிறாள்.

இவளைத்தான் எதிர்பார்த்திருந்தேனா இத்தனைநாளும்?

நரைத்த கூந்தலும் சுருக்கம் விழுந்த முகமும் அவளுக்குள் இருந்த அந்த அழகிய கன்னியை எங்கோ தொலைத்துவிட்டு

„நீ வருவாய் என நான் இருந்தேன்..
ஏன் மறந்தாய் என நானறியேன்..!“

கல்யாணிமேனனின் அந்தப் பழையபாட்டுமட்டுமே இன்னும் புத்தம் புதிதாய்…

„இருங்கோ மாமி ஏன் நிற்கிறியள்?“

„ஓம் பிள்ளை இருப்பம்!“

„செல்லம்… செல்லம்மா…வா.. வா.. வாருங்கோ!“

முதற்தடவையாக ஒருமையும் பன்மையுமாகத் தடுமாறிவரும் வார்த்தைகள்..

முன்பொருநாள் கண்ணீரோடு அவள் தன்னைக் கடந்துபோனபோது ஏற்பட்ட தடுமாற்றம்போல் இப்போதும்..

„எனக்கென்ன மரியாதை..வாருங்கோ இருங்கோ எண்டு.. வா எண்டே கூப்பிடுங்கோ..!“

கிழவிகள் தங்களைக் கிழவிகளாக ஒப்புக் கொள்வதில்லை என்ற நினைப்போடு கூடவே சிரிப்பும் வந்தது.

„மரியாதை வேணாமெண்டதுக்காக நான் என்னைக் குமரியாய் நினைச்சுக்கொண்டிருக்கிறன் எண்டு நினையாதேங்கோ!“

அவனை உணர்ந்தவள்போல் அவள் சொன்னாள்.

தன்னைத் தெரிந்துகொண்டுவிட்டாளே என்பதுபோல் மறுபடி சிரிப்பு வந்தது.

„எப்ப ஜெர்மனிக்கு வந்தனீங்கள்…வந்தனீ..“

„வந்து ரெண்டு கிழமையாச்சுது..பிள்ளையள் கூப்பிட்டுதுகள்..ஒரு மூண்டுமாத விசாவிலை வந்திருக்கிறன்!“

„அவர்..“

„அவர் போய் ரெண்டு வருசமாச்சுது..!“

அவளது கண்களை ஆழ ஊடுருவுகையில் அதில் எந்தவித உணர்வையும காணவில்லை.

தெளிந்திருந்தது அந்த வானம்போல்.

சில வினாடி அமைதி.

„வந்தவை எல்லாரும் போறதுதான்..!“

„இப்பிடிப் போறது இயற்கை..ஆனால் உயிரோடை இருக்கிறபோதே சிலபேர் இல்லாமல் போயிருகிறதைத்தான் தாங்கிக்கொள்ள முடிகிறதில்லை!“

அவள் எதைச் சொல்கிறாள்?
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவளது காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதை நான் நிராகரித்ததையா?

அதற்குப் பிறகு பல விடயங்களைப் பகிர்ந்துகொண்டு செல்லம்மா போய்விட்டாள்.

மறுபடி யன்னலருகே வந்து வானத்தை வெறிக்கையில் முகில்கள் அலைந்துகொண்டிருந்தன..

„ஆரம்மா இந்தக் கிழவி..?“

„அது அம்மப்பாவின்ரை பழைய லவ்வர்..!“

மகள் பேத்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

„அப்ப ஏன் கலியாணம் முடிககேல்லை அவையள்?“

„இந்த மனிசி அப்பாவை லவ்பண்ணினது அப்பாவுக்குத் தெரியாது.. அப்பா அம்மாவை லவ்பண்ணி முடிச்சிட்டார்.“

„ஏனம்மா காதல் எண்டால் அது ஒருத்தரிலை ஒருத்தருக்குமட்டும்தான் வருமா?“

„உன்ரை அப்பா வரட்டும்… கேட்டுச்சொல்கிறன்!“

„அய்யய்யோ எனக்கு ஒரு மறுமொழியும் வேணாம் நான் கேட்கேல்லை!“

பேத்தி பெரிதாகச் சிரித்தாள்.

மகளுக்கும் பேத்திக்குமிடையான உரையாடல் காதுகளில் விழத்தான் செய்தது.

ஒருத்திக்கு ஒருத்தன் என்பது ஒழுக்கமான வாழ்வுக்கான கட்டுப்பாடு.

ஆனால் காதல் என்பது..

அது கட்டறுத்துப் பாயும்வெள்ளம்…

எல்லார்மீதும் எல்லார்க்கும்வரும்.

ஆனால் அது ஆசை கலவாதிருக்கும்வரை அபாயமற்றது.

„இளந்தாரியள் பரவாயில்லை.இந்தக் கிழடுகளைத்தான்நம்ப முடியாமக் கிடக்குது!“

குமரிகள் சொல்கிறார்கள்.

அவர்கள் அறிந்ததெல்லாம் ஆசையில் நனைந்த காதல்.

ஆசை அறுத்தபின் அழகைத் தொலைத்தபின் முதுமையிலும் மலரும் காதல் என்பது குழந்தைக் காதல்போல்..

அதில் களங்கம் இல்லை களவும் இல்லை.

„தாத்தா..!“

பேத்தி அருகில் வந்தாள்.

„என்னம்மா..?“

„உங்களிட்டைத்தான் கேட்கவேணும். ஜெர்மன்காரர் வயசுபோனபிறகு துணைதேடிக் கொள்ளிறதைப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்..?“

„கடைசிக் காலத்திலை ஒருதுணை தேவைதானே?!“

அவளிடமிருந்து சிரிப்பொலி எழுந்தது.

„வயசு போனபிறகு எதுக்குத் துணை?“

„அப்பதானே துணை தேவை?“

„அதுக்கு ஏன் கலியாணம் முடிக்கவேணும்… வேலைக்கு ஆக்களை வைச்சுக்கொள்ளலாம்தானை..?“

„வேலை என்கிறது வேறை! சேவை என்கிறது வேறை! வேலை சம்பளத்துக்காக! சேவை காதலுக்காக!“

„காதலோ வயசு போனதுகளுக்கோ..?“

„வயசு உடம்புக்குத்தான். ஆனா மனசு எப்பவும் இளமையாக இன்னொருத்தர் அன்புக்காகத்தான் ஏங்கிக்கொண்டிருக்கும்.!“

„ஓ..அதுதானா அது..?“

அவள் எதையோ நினைத்துச் சிரித்தாள்.

„எதுதானா எது?“ என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

„கிழடுகளுக்குப் புத்திமாறாட்டம் வரும் எண்டு சொல்கிறது சரிதான்!“

அவள் சிரித்தபடியே திரும்பினாள்.

„காதலும் ஒருவகையில் புத்திமாறாட்டம்தானோ?“ என்று இப்போது தோன்றிற்று

இல்லாவிட்டால் இந்தப் பாழும் மனசு ஏன் செல்லம்மாவையே சுற்றிக்கொண்டிருக்கிறது?