இரண்டு நாட்களாக ஒருவிதத் தனிமை.பக்கத்துக் கட்டில்கள் இரண்டும் புத்தம் புதியனவாய் -ஆனால் வெறுமையாய் – வரப்போகும் எவரோ இரண்டு நோயாளிகளுக்காகக் காத்துக் கிடந்தன.மூன்று வேளையும் உள்ளே உணவுத் தட்டுடன் வந்துபோகும் தாதிகளையும், காலையில் வந்து ஒருதடவை சுகம் விசாரித்துவிட்டுப் போகிற வைத்தியர்களையும் தவிர மற்றப்படி இவனுக்குத் தனிமை.இந்தத் தனிமை கடந்த இரண்டு நாட்களாகத்தான்.அதற்குமுதல் கடந்த இரண்டு வாரங்களாக இவனது பக்கத்துக் கட்டில்களில் யாராவது நோயாளிகள் இருந்தார்கள்.. அவர்களைப் பார்க்க உறவினர்கள் வந்து போனார்கள்.அனைத்தும் அந்நிய முகங்களாக இருந்தாலும் அவர்களைப் பார்ப்பதில் அவர்களுக்காகப் புன்னகைப்பதில் அவர்களது உரையாடல்களை அவதானிப்பதில் இவனுக்கு இவனது தனிமை பெரிதாய்த் தோற்றமளித்ததில்லை..அமைதியாய்க் கழிந்துபோகிற பொழுதுகள்..சாதாரணமாய் ஆரம்பித்த நெஞ்சுவலி..எல்லாவிதமான வைத்தியர்களும் ஆராய்ச்சிசெய்தும்.. எக்ஸ்ரேக்கள் என்று படம்போட்டுப் பார்த்தும் இன்னமும் கண்டுபிடிக்க மாட்டாமல் நெஞ்சுக்குள் இன்னும்தான் அந்த வலி.ஒரு நாளைக்கு இரண்டுதடவையோ மூன்று தடவையோ சுர்ரென்று வலியெடுக்கும்.அந்த நேரத்துக்குமட்டும் மார்பைப் பிசைந்துகொண்டு சுருண்டு போவான் பிறகு சாதாரணமாகிவிடும்.அத்தனை வைத்தியர்களுக்கும கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு இவனைமட்டும் வதைசெய்துகொண்டு..இப்போது பிடிபட்டுவிட்டதாம்…ஒரு சின்ன அறுவை சிகிச்சையுடன் எல்லா வலிக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று வைத்தியர்கள் தீர்மானித்துவிட்டார்கள்.. இவனிடம் சொன்னபோது இவன் மறுக்கவில்லை.நாளைக்கு அறுவைச் சிகிச்சை…அதற்காகக் காத்திருக்கிறான்.பக்கத்துக் கட்டில்களில் இப்போது யாரும் இல்லாதது இவனுக்கு ஆறுதலாக இல்லை..தனிமை..“தனியாக வந்தோம்.. தனியாகப் போய்விடப்போகிறோம்.. இடையில் சிலபொழுது சுற்றியுள்ள மனிதர்களுடன் ஒரு ஒட்டுக்குடித்தனம்.. இவ்வளவுதானா வாழ்க்கை..?““இல்லை!“ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.இவன் இந்த வார்ட்டுக்கு வந்த புதிதில் ஒருநாள் பைபிளோடு இரண்டுபேர் இவனிடம் வந்தார்கள்.. முன்பென்றால் அவர்களைச் சினந்து அனுப்பிவிடுவான் இவன்.இப்போது மனம் தளர்ந்திருந்தது.. அவர்களைச் சினக்காமல் மெதுவாய்ப் புன்னகைத்தான்..“நாங்கள் மதப் பிரசாரம் செய்ய வரவில்லை.. ஒரு உண்மையான கடவுளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.. உலகத்தின் முடிவு நெருங்கியிருக்கிறது.. இப்போதுகூட நாங்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் ஒருபோதும் நாங்கள் விழித்துக்கொள்ள முடியாது..!“- வந்தவர்களில் ஒருவர் ஆரம்பித்தார்..இவன தலையசைத்தான்..“உலகம் என்கிறது என்ன.. ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு உலகம்தான்.. என்வாழ்க்கை முடிகிறபோது என் உலகம் முடிந்துபோகும்..!“ என்றான் இவன் மெதுவாய்.“அதுதான்!“ என்றார்கள் அவர்கள்.“உலகத்தை இறைவன் படைத்தான்.. அதை மனிதனுக்குத் தந்தான்.. ஆனால் மனிதன் அதை நாசப்படுத்திவிட்டான்.. உலகம் அழிகிறது என்றால் மனிதன் அழிகிறான் என்றுதான் பொருள்..!“தன்னுடைய கூற்றை அவர்கள் மறுதலிக்காததால் இவனுக்கு அவர்கள்மீது ஒரு மதிப்பு வந்தது.உலகத்தின் இறுதிவேளை என்று அவர்கள் சுட்டிக்காட்டுவது என் முடிவைத்தானோ..? என்று இவன் இப்போது நினைக்கத் தலைப்பட்டிருந்தான்..ஆனால் உலகத்தின் முடிவில் இறைவன் வருவான் என்று அவர்கள் சொன்னதில் இவனுக்கு ஒரு ஆறுதல் இருந்தது.உலகத்தின் முடிவுவரை நான் காத்திருக்க முடியுமோ என்னவோ.. ஆனால் என் முடிவு வருகிறபோது எனக்கென்றிருக்கிற இந்த உலகம் என்மட்டில் முடிந்துபோகும்… முடிவில் வருகிற இறைவன் என்முடிவிலும் வந்துதான் ஆகவேண்டும்.!உயிரின்மீது இவனுக்கு அத்தனை பெரிய பற்றுதல் முன்பும் இருந்ததில்லை.. இப்போதும் இல்லை…“ஓடு.. ஓடு.. நீயாவது ஓடித் தப்பு..!“ என்று இவனை நாட்டைவிட்டு விரட்டிவிட்ட சொந்தங்கள்மீது இவன் அடிக்கடி தனக்குள்ளாகக் கோபப்பட்டுக்கொள்வான்..எட்டு வருடங்களுக்கு முன்பு, இருந்ததையெல்லாம் விற்றுக்கொட்டி இவனை வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவரப் பாடுபட்ட சொந்தங்களில் பாதி இப்போது ஊரில் இல்லை..அம்மா போய், தம்பிகள் போய், தங்கைகள் இருவரது கணவர்கள்போய்.. எல்லோரும் வானுலகம் போயாயிற்று..விதவைகளாய் இருக்கின்ற தங்கைகள் அவர்களது மழலைகள் இவைகள்தான் இவனுக்கு இப்போது ஊரில் இருக்கின்ற சொந்தங்கள்..அவர்கள் எதிர்பார்த்ததுபோல் இவன் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டானே தவிர அவர்களுக்காய் இவன் ஏதும் செய்ததில்லை.அவ்வப்போது எவர்மூலமாகவாவது வருகின்ற மரண அறிவித்தல்களைக் கேட்கும்போதுமட்டும் மனம் குமுறி அழுவான்..அடைக்கலம் தேடிவந்த நாட்டிலும் நிம்மதிபெறமுடியாமல் மனம் தத்தளிக்கும்போது, சொந்தநாட்டில் சுதந்திரத்துக்காய் இரத்தம் சிந்திச் செத்திருக்கலாமே என்ற ஆதங்கம் வரும்.ஆனால் இப்போது உணர்கிறான்..“இந்தநோயாளி அங்கே எதைச் சாதித்துவிடப்போகிறேன்?“அறைக்கதவை மெதுவாயத் தட்டிவிட்டு யாரோ உள்ளே நுழைந்தார்கள்.ஆவலாய் திரும்பினான்..“மார்ட்டினா..!““ஹலோ இந்த்ரன்..“அவளைக் கண்டதில் மனது சற்றுக் கவலைகளை மறந்தது..வெள்ளைத் தோல்களுக்குள் கறுப்பு மனங்களை மறைத்துக்கொண்டிருக்கிற பல்வேறுவகையான மனிதர்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டவளாய்இந்த மார்ட்டினா..வெள்ளைத்தோலுக்குள் வெள்ளைமனம்.பல சமயங்களில் ஒரு தாயின் அரவணைப்போடு, தங்கையின் பரிவோடு, ஒரு தோழியின் உபசரணையோடு சொந்தக் காரிபோல் நடந்துகொள்கிற இவள்..அந்நியநாட்டவன் என்றதும் முகம்கறுத்துப்போகிற பல தாதிகளிலிருந்தும் விதிவிலக்காய்..“நாளைக்கு உனக்கு அறுவைச் சிகிச்சையாமே..?!“ என்று பரிவுடன் கேட்டாள் அவள். டொச் என்கின்ற மொழி இவளது இனிய உச்சரிப்புக்காகவே உருவானதோ என்று எண்ணத் தோன்றும் இவனுக்கு.“ஆம்..!“ என்றான் இவன்.“ஒன்றுக்கும் கவலைப்படாதே.. உனக்கு எல்லாம் சரியாகிவிடும்!“அவளது தொனியில் இவனுக்கு எல்லாம் சரியாகிவிட்டாற்போல் ஒரு பிரமை தோன்றிற்று.“நான் கவலைப்படவில்லை!“ என்றவன்,“மார்ட்டினா…!“ என்று தயங்கினான்.“என்ன..?“ என்றாள் அவள்.“எனக்கு நீ ஒரு உதவிசெய்யவேண்டுமே!““என்ன..?““ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னை ஒரு அனாதைமாதிரி இங்கே அடக்கம் செய்ய விட்டுவிடாதே!““பைத்தியம் மாதிரிப்பேசாதே..உனக்கு ஒன்றும் ஆகாது!“ என்றாள் அவள்.“ஜெர்மன் வைத்தியர்கள் மிகத் திறமைசாலிகள் என்பது உனக்குத் தெரியும்தானே இந்த்ரன்.?!““தெரியும்..!“என்றான் இவன்..“ஆனால்.. மனிதசக்தியைவிட கடவுளுடைய சக்தி மிகப்பெரியது..!““கடவுளா..? என்றாள் மார்டினா.“அப்படி ஒரு ஆள் இருக்கிறானா என்ன?““ஆளா..? கடவுளையா ஆள் என்கிறாய்..?““பின்னே..மனிதனைப் படைத்தவன் மனிதன்… உன்னைப் படைத்தவர் உன் அப்பா.. உன் அப்பாவைப் படைத்தவர் உன் தாத்தா. உன் தாத்தாவைப் படைத்தவர் அவரது அப்பா.. இப்படி மனிதனைப் படைத்தவன்மனிதன்தான்.. இதில் கடவுள் எங்கே..“இவனுக்குக் குழப்பமாயிருந்தது.இவ்வளவு அன்பு பாசம் பரிவு இவைகளைக்காட்ட முடிந்த ஒருபெண் ஏன் கடவுளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள்?“எனக்கு நம்பிக்கையில்லை இந்த்ரன்.. கடவுள் என்பவன் நம்மைப் படைத்திருந்தால் இந்த உலகத்தில் இத்தனை கலகங்கள் ஏன்? துயரங்கள் ஏன்? அசம்பாவிதங்கள் ஏன்? அழிவுகள் ஏன்..?““இதெல்லாம் இல்லாவிட்டால் கடவுளைப்பற்றி மனிதன் நினைக்க மாட்டானே!“ என்றான் இவன்.மார்ட்டினா சிரித்தாள்:“பைத்தியக்காரப் பையா! இதெல்லாம் மனிதன் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டிருக்கிற கற்பனைகள்.. கதைகள்.. இதையெல்லாம நம்பி நம்பித்தான் இந்த உலகமே சீரழிந்துகொண்டிருக்கிறது. தன்னை மனிதன் அறியவேண்டும் என்பதற்காக தப்புக்களைப் பண்ணவைக்கிற ஒரு ஆள் அல்லது ஏதோ ஒன்று எப்படிக் கடவுளாக முடியும்?“இவன் பதில் சொல்லவில்லை.ஆனால் அதற்காக அவளது வார்த்தைகளை இவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.“நிறையயோசிக்காதே..மூளை குழம்பிப்போகும்“ என்றவள்,“நாளைக்கு மறுபடி சந்திக்கிறேன்..!“ என்று விடைபெற்றுப்போனாள்.இரவுமுழுதும் அவளைப்பற்றிச் சிந்திக்கவே இவனுக்கு நேரம் போதுமானதாக இருந்தது.மறுநாள் பகல் முழுதும் என்ன நடந்தது என்று இவனுக்கு நினைவில் இல்லை..காலையில் அறுவைச்சிகிக்சை அறைக்குள் இவனை அழைத்துப்போனதும் மயக்கமருந்து தந்ததும் மட்டும்தான் இவனது ஞாபகத்தில் இருந்தது..விழித்துப் பார்க்கையில் அறுவைச் சிகிக்சை அறைக்குள்ளேயே இவன் இருப்பது இவனுக்குப் புரிந்தது.அசைய முடியவில்லை.மரணத்தின் விளிம்பைத் தொட்டுவந்தாற்போன்றதொரு உணர்வுமட்டும் தென்பட்டது.பக்கத்தில் இவனது அவசர உதவிக்காகத் தாதிகள்..வார்ட்டுக்குத் திரும்பக்கொண்டுவந்து இவனைச் சேர்த்த இரண்டு நாட்களாக இவன் தன் நண்பர்களை எதிர்பார்த்தான்.. எவரும் வரவில்லை.மார்ட்டினாவாவது வருவாளே!இங்கே அவள் தாதியாயிற்றே.. ஏன் வரவில்ல..?காலையில் ஊசிமருந்து தரவந்த தாதியிடம் பலவீனமான குரலில் இவன் கேட்டான்.“மார்ட்டினா எங்கே..?““எந்த மார்ட்டினா..?“ என்றாள் அவள் விளங்காமல்.“இங்கே தாதியாக வேலை பார்க்கிற மார்ட்டினா..!““அவளா..?“ என்றாள் இவள் தணிந்த குரலில்..“அவளை ஏன் கேட்கிறாய்..?“இவன் பதில் சொல்லவில்லை.தாதி ஒரு பெருமூச்சுவிட்டு வேதனை கலந்த குரலில் சொன்னாள்.“உனக்கு அறுவைச் சிகிச்சை நடந்த அன்றைக்கு ஒரு வாகனவிபத்தில் மார்ட்டினா இறந்துபோனாள்.!“- இவனுக்கு நெஞ்சு சுர்ரென்று வலித்தது.துடித்துச் சுருண்டான்..அடுத்த சில நிமிடங்களில் இவன் உயிரடங்கிப்போனான்..இவன் குடியிருந்த அறையில் இவனுக்காய் ஒரு கடிதம் காத்துக் கிடக்கிறது.“இன்னும் ஒருமாதத்துக்குள் நீ இந்த நாட்டைவிட்டுப் போ!“(பிரசுரம்: பூவரசு 1991)