பூங்காற்றும் தீண்ட ஏங்கும் ;
பூங்கொடிகள் தாங்கத் தவிக்கும் ;
தங்கத் தாமரை அழகைச் சுமக்கும் ;
மஞ்சள் நிற மல்லிகைப் பூவே…!
கோடையிலும் வந்து போகும் ;
நடை பயிலும் வானவில் நீயே…!
வைகறையில் மெல்லச் சிரிக்கும் ;
குறையில்லாத வண்ண நிலவு நீயே…!
எண்ணங்களில் சந்தம் சேர்த்து ;
வண்ணம் சிந்தும் மரகதமணியே !
தேவலோகத் தேவதையாக வந்து ;
விழிகளின் சிறையில் சிறை பிடித்தாயே…!
சித்திரம் பேசுமென சிந்தித்த வேளை…
சிற்பமும் சிரிக்குமென உணர்த்திவிட்டவளே…
சித்திரை வெயிலில் ஒளிர்ந்தது அழகே…!
கார்த்திகை மழையில் நனைந்தது கவியே…!
மனதை வருடி, இமைகள் திருடி,
உறக்கம் பருகி, இதயம் ஊடுருவி,
உயிரின் கருவில் உறைந்து நிறைந்து ;
சிந்தை முழுதும் பரந்து படர்ந்த நாயகியே…!
பத்தடி தூரத்தில் பாதம் வைத்து நீ நடக்க ;
பற்றி எரியும் நெஞ்சம் பதைபதைத்துப் பரிதவிக்க ;
பார்வை கொண்டு பாலை வார்த்துவிடு ;
பாழாகிப் போன நெஞ்சம் பசியாறிப் போகட்டும்…!
– வேலணையூர் ரஜிந்தன்.