மாலையில; படிந்த இருள் தொடர, வானில் இருந்து கொட்ட ஆரம்பித்த வெள்ளைப் பனி, வீதி எங்கும் சிதறிப் பரவி சேறாக குழைந்து கிடந்து வாகனத்தின் சில்லுகளுக்குரிய உராய்வை அகற்றியது. ஆபத்தான ஒரு குறுகிய பயணம்.
எமது வாகனம் தமிழ் இசைக் கலாமன்றத்தின் கலா மண்டபத்தை நோக்கி எம்மை அழைத்துச் சென்றது.
காரணம் எமக்கு ஏற்கென கிடைத்த ஒரு அழைப்பு. வாய்ப்பாட்டு மற்றும் வீணை ஆகிய கர்நாடக சங்கீதப் பாடங்களை கற்றுத் தரும் ஆசிரியையும் சாமகானம் இசைக் கல்லூரியின் ஸ்தாபகருமான ஶ்ரீமதி சாருமதி மனோகாந்தன் அவர்களின் புதல்வி சுபேக்கா மனோகாந்தன் பாட, அவருக்கு பக்கவாத்தியக் கலைஞர்களாக இசைச் செல்வர்கள் ராம்பிரகாஸ் சரவணபவான்(வயலின்) மற்றும் கீதன் விவேகானந்தன் (மிருதங்கம்) ஆகியோர் பக்தவாத்தியம் வாசிக்க, செல்வி அஸ்விதா சுரேந்திர சர்மா தம்புராவை மீட்ட.. இடம்பெறவுள்ள கர்நாடக இசைக் கச்சேரிக்கான அழைப்பைப் பெற்றுக்கொண்ட ஆர்வமே எமது அவசரத்தைத் தூண்டியவண்ணம் இருந்தது .
ஒருவாறு பல தடைகளைத் தாண்டி மண்டபத்தை அடைந்து உள்ளே சென்ற போது, மேடையில் நான்கு கர்நாடக இசையின் இளைய வாரிசுக்களாக அங்கு அமர்ந்த வண்ணம் கச்சேரியை . தொடங்குவதற்காக் காத்திருந்தார்கள். சபையில், ரசிகர்கள் மிகவும் குறைவாகவே.
வெளியில் காணப்பட்ட மோசமான கால நிலை மற்றும் பயணம் செய்ய முடியாத வகையில்,வீதிகளின் சீரற்ற தன்மை, அரச வானிலை நிலையம் விடுத்த ஆபத்தை விளக்கும் எச்சரிக்கை, ஆகியவை மண்டபம் நிறைந்து விடாமல் ‚சதி‘ செய்துவிட்டன.
வாசலில் நின்ற வண்ணம் வந்தோரை வரவேற்ற ஶ்ரீமதி சாருமதி மனோகாந்தன் அவர்கள் முன்வரிசையில் வந்தமற, கச்சேரி ஆரம்பமானது.
தனது அன்னையும் இசைக் குருவுமாகிய சாருமதி மனோகாந்தன் அவர்களிடத்தில் கற்றுக் கொண்ட கர்நாடக சங்கீதத்தின் ஆரம்ப நிலை தொடக்கம் இதுவரையிலும் தான் மேடையில் பக்தவாத்தியக் கலைஞர்களோடு இணைந்து ஒரு தரமான கச்சேரியை சபையோரிடம் சமர்ப்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்வார் என்ற எண்ணத்தை அங்கு கூடியிருந்த சபையோர் மத்தியில் ஏற்படுத்தினார் சுபேக்கா.
சபையில் இசையாசிரியர்கள் மற்றும் வாத்திய இசையாசிரியர்கள் ரசிகர்கள் ஆகியோர் கூடியிருக்க எவ்விதமான சலனமுமின்றி புன்னகை நெளியும் முகத்தோடு இதமான சங்கீதத்தை எம் செவிகளுக்கு அளித்தார். பக்கவாத்தியக் கலைஞர்கள் இருவரும் மிகுந்த அனுபவசாலிகளாக கம்பீரத்துடன் வீற்றிருந்து தங்கள் கருவிகளை மீட்டிக் கொண்டிருந்தனர்.
. அன்றைய கர்நாடக இசைக் கச்சேரியில் தமிழிசையின் கூறுகள் இரண்டறக் கலந்துவிட்டன என்றும் எதிர்காலத்தில் எமது கனடிய கர்நாடக இசைமேடைகளில் இளங்;கலைஞர்கள் தமிழிசையையும் நிச்சயம் சுமந்தே செல்வார்கள் என்பதையும் , இசைச் செல்வி சுபேக்கா செய்தியொன்றின் மூலம் பதிவு செய்துள்ள்ளர் என்றே கூறவேண்டும்..
ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றமானது இவ்வாறான இளங்கலைஞர்களுக்கு தொடர்ந்தும் சந்தர்ப்பங்களை வழங்கி ஊக்கமளித்து வருவதையும் நாம் பாராட்டாமல் இ ருக்க முடியாது.