கோழி பற பற….- இந்துமகேஷ்
நாயும் பூனையும்மாதிரி, பூனையும் எலியும் மாதிரி, பாம்பும் கீரியும் மாதிரி என்றெல்லாம் பகைமைக்கும் எதிர்ப்புக்கும் உதாரணம் காட்டப்படுகின்ற மாதிரிகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டதுபோலத் தோற்றம் காட்டுகின்றன.மனிதனது வளர்ப்புப்பிராணிகள் யாவும் ஒன்றோடொன்று இயைந்து போவதாகத் தெரிந்தாலும் அவற்றின் அடிப்படையான இயல்புகள் அவற்றிடத்திருந்து முற்றாக அகன்று விடுவதில்லை.நாய்கள் எவ்வளவுதான் மனிதனுக்கு நன்றியுள்ளவையாக இருந்தாலும் தன் இனத்தைக் கண்டால் கடித்துக் குதறுவதுபோல் ஆவேசப்பட்டுக் குரலை உயர்த்துவதுதான் நடைமுறைச் சங்கதியாக இருக்கிறது. நாயிடத்து இருக்கும் நன்றியைப் பாராட்டும் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ அதனிடத்திருக்கும் கெட்ட குணங்களையும் கற்றுக்கொள்கிறான். அதனால்தான் தன் இனத்தவனில் ஒருவனின் முன்னேற்றம் சில சமயங்களில் அவனுக்கு ஒருவித எரிச்சலையும் பொறாமையையும் உருவாக்கி விடுகிறது. அவனை எதிர்த்துக் குரலெழுப்பி சண்டைக்கு அழைத்து விழுத்த முனைகிறான்.நன்மையும் தீமையும் கலந்ததே உலகவாழ்க்கை என்றானபோது அதை அத்தனை இலகுவில் மாற்றிவிட முடியாது. பெரும்பாலும் ஒன்றின் அழிவிலேயே இன்னொன்றின் வாழ்வு தொடர்கிறது. மாமிச பட்சணிகளின் வயிற்றுப் பசிக்கு இன்னோர் உயிரினமே இரையாகிப் போகின்ற இயற்கையை மாற்றுவதென்பது அத்தனை இலகுவானதல்ல.குற்றம் இயற்கையுடையதா அல்லது இன்னோர் உயிரைக் கொல்லாமல் தான் உயிர்வாழமுடியாது என்று இரைதேடிக் கொலைபுரியம் உயிரினங்களுடையதா?இந்தக் கேள்விக்கு எப்படி விடை காண்பது?விடைதெரியாத புதிர்களில் ஒன்றாகவே இந்தக் கேள்வியும்-முட்டை முதலா? கோழி முதலா? என்ற கேள்வியைப் போலவே!முட்டையிலிருந்து கோழி வந்தாலும் கோழியில்லாமல் முட்டை வந்திருக்க முடியாது ஆகவே கோழிதான் முதல் என்று விடை கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனாலும் இந்தக் கோழி வருவதற்கும் ஒரு முட்டை இருந்திருக்கவேண்டுமே.எது எப்படியோ கோழியே முதலில் வந்திருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஏதோ ஒரு பதில் கிடைத்துவிட்டது என்று நம்மைச் சமாதானப்படுத்திக் கொள்ளவாவது இதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.நமது வளர்ப்புப் பறவைகளில் முக்கியமானது கோழி. நாம் அதற்குக் கொடுக்கும் நவதானியங்களோடு வீட்டு முற்றத்திலும் வேலியோரங்களிலும் குப்பைகளுக்குள்ளும் ஓடித்திரியும் பூச்சி புழுக்களையும் உண்டு உயிர் வாழ்கிறது கோழி.மனிதர்கள் கோழிகளை ஏன் வளர்க்கிறார்கள்? அதன்மேலுள்ள பிரியத்தாலா?உலகெங்கிலும் கோடிக்கணக்கில் நாளாந்தம் பிறக்கும் கோழிகள் முட்டைகளாகவும் கோழிகளாகவும் மனிதனின் உடல் வளர்க்க உதவுகின்றன. அதனால் மனிதன் அவற்றின்மீது அக்கறை செலுத்துகிறான்.அண்மையில் கோழிக்காய்ச்சல் என்று இயற்கை பயமுறுத்தியும் மனிதன் கோழிகளை ஒதுக்கிவிடவில்லை. மனிதனுக்காக கோழிகள் பிறப்பதும் மரணிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.முட்டைகளையும் தன் உடலையும் மனிதர்களுக்கு இரையாகத் தந்து அவர்களது நலத்தைப் பாதுகாப்பதில் கோழிக்கு இணையாக வேறு எந்த இனத்தையும் சொல்லமுடியாது.அதிகாலையில் கூரையில் ஏறி நின்று விடியலை அறிவிக்கும் சேவல்களே மனிதனுக்கு விரைந்து இரையாகிப் போகின்றன.பெண்ணாகப் பிறந்ததால்தான் துன்பம் என்று பல மனிதப் பெண்கள் சொல்லிக்கொண்டிருக்க, ஏனைய உயிரினங்களில் ஆணாகப் பிறந்ததாலேயே பெரும்பாலும் அவலங்களுக்குள்ளாகின்றவையே அதிகம். மாடுகளில் எருதும், ஆடுகளில் கடாவும், கோழிகளில் சேவலும் என்று அழகழகான ஆணினமாய்ப் பிறந்தும் மனிதர்களின் கொலைக்கரங்களுக்குள் சிக்குண்டு விரைந்து மாய்ந்துபோவது அவைதான்.சேவல்கள் சீக்கிரமாய் உயிரிழந்துபோக குஞ்சுகளைக் கட்டிக்காத்து வளர்க்கும் பெரும் பொறுப்பு கோழிகளுடையதாகிவிடுகின்றது. எத்தனை குஞ்சுகளைப் பொரித்தாலும் அத்தனை குஞ்சுகளையும் தன் இரட்டைச் சிறகுகளுக்குள் அடக்கி அவற்றை உறங்கவைக்கும் கோழிகளின் தாய்மை உணர்வு கொத்திக்கொண்டுபோகவரும் பருந்திடமிருந்தும் காகங்களிட மிருந்தும் அவற்றைப் பாதுகாப்பதில் அது காட்டும் வீரம் இவைகள் கோழியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய குணாதிசயங்கள்.“கோழிமிதித்துக் குஞ்சு சாவதில்லை!“ „கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்!“ என்று அவ்வப்போது பழமொழிகளிலும் இடம்பிடித்து மனிதனுக்குப் புத்தி புகட்டுகின்ற கோழியால் அவனிடமிருந்து உயிர்தப்புவதில்மட்டும் எச்சரிக்கையாக இருக்க முடியவில்லை.இதுவும் இயற்கையின் நியதியா?தாவர பட்சணியாய் சில உயிரினங்கள். மாமிசபட்சணியாய் பல உயிரினங்கள். அதுபோல் மனிதர்களிலும் இருவகை உண்டு.கோழியின் உடலைக் கூறுபோட்டுக் கொண்டிருக்கும் மனிதர்கள் ஒருபுறம்.சேவலைக் கொடியேற்றி, „சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றிபோற்றி!“ என்று துதித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஒருபுறமாய் கோழிகளோடு நம் வாழ்வும் தொடர்கிறது.