கூவி
அழைக்கும்
குரலுக்காய்
குந்தி தவமிருக்க
கூவாயோ கருங்குயிலே..
தாவி
தவழ மனம்
ஏங்கித் தவிக்குதே
தாழ்திறவாயோ
கருங்குயிலே..
தேவியுன்
தரிசனத்துக்காய்
தேடி அலைந்து
நான் தவிக்க
கூடிக் குலவிக் களிக்க
நாடி வாராயோ
கருங்குயிலே..
பாவி
இவன் பாவிசைத்து
பரவச மூட்டி
மகிழ்ந்திட
மேவிய மெளன
போர்வை
களைந்து நீ வாராயோ
கருங்குயிலே..
நீவி
நின் எழில்
மேனியெங்கனும்
அன்பு மலர்
தூவி கொண்டாட
நிழல் வேண்டும்
தாராயோ
கருங்குயிலே..
புவியிருப்பில்
உன்னோடான
ஈர்ப்பிலுன்
மனமடியில்
குடில் அமைத்து
ஆனந்த கூத்தோடு
ஆடிக்களித்திட
கூவாயோ கருங்குயிலே..
ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி